இந்து கோவில் சுவற்றில் இந்தியா, மோடிக்கு எதிரான வாசகம்- காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைவரிசை
- காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
- கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் வெறுப்பூட்டும் வாசகங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் இந்த வெறுப்பூட்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
இது தொடர்பாக நெவார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளால் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.