உலகம்

"நான் அரசியல் கைதி.. நவீன நெல்சன் மண்டேலா" - குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின் டிரம்ப் கூறுவது என்ன?

Published On 2024-05-31 05:33 GMT   |   Update On 2024-05-31 06:50 GMT
  • தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
  • "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

 

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு மோசடியான அவமானகரமான வழக்கு. இதற்கு உண்மையான தீர்ப்பு நவம்பர் 5 (அமெரிக்க அதிபர் தேர்தலில்) மக்களால் வழங்கப்படும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். நான் நிரபராதி, நமது தேசத்துக்காகவும் அரசியலமைப்புக்காகவும் போராடி வருகிறேன்" என்று தெரிவித்தார்.

 

தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "நான் உண்மையை பேசியதற்கு அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் என்னை சிறையில் அடைக்க விரும்பினால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று நாவீன காலத்தின் நெல்சன் மண்டேலாவாக மாறுவேன். அது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்த தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News