உலகம்

பெண்ணை தாக்கிய விண்கல்: பிரான்ஸில் அதிசயம்

Published On 2023-07-17 09:49 GMT   |   Update On 2023-07-17 09:49 GMT
  • வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம்
  • அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது

மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென கூழாங்கல் போன்ற ஒரு பொருள் அவர் விலா எலும்பை தாக்கியிருக்கிறது.

"பக்கத்து கூரையின் அருகில் 'பூம்' என பெரிய சத்தம் கேட்டது. அடுத்த வினாடி என் விலா எலும்பில் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை ஒரு வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம். அது நிறம் எதுவும் இல்லாமல் இருந்தது" என அந்த பெண் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அப்பெண் அந்த பொருள் என்ன என தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். அதில் அது சிமெண்ட்டால் செய்யப்பட்டதல்ல என்றும் அது ஒரு விண்கல் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தியர்ரி ரெப்மான் (Thierry Rebmann) எனும் புவியியலாளரிடம் இதுகுறித்து அவர் கேட்டிருக்கிறார். அதனை பரிசோதித்த ரெப்மான், அது பூமியை சேர்ந்த பொருளல்ல என உறுதிப்படுத்தினார்.

"அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது. அது விண்கல்தான். விண்கற்கள் பூமியில் விழுவது அரிதானதல்ல. ஆனால், விண்கல்லை கண்டெடுப்பதும், அதிலும், விண்கல் ஒருவர் மேலே வந்து விழுவது போன்ற சம்பவங்களும் மிக அரிதான நிகழ்வாகும். வழக்கமாக பாலைவன பகுதிகளில் விழும் விண்கற்கள், பிரான்ஸ் போன்ற மிதமான வானிலையை கொண்டிருக்கும் நாடுகளில் விழுவது வழக்கமான ஒன்றல்ல" என்று டாக்டர் ரெப்மான் கூறியிருக்கிறார்.

பூமியின் வளிமண்டலத்தில் பல நாட்கள் பயணம் செய்து தரையைத் தாக்கும் விண்வெளிப் பாறைகள்தான் விண்கற்கள் எனப்படும். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 டன் விண்கற்கள் பூமியில் விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஓல்ட் வாஷிங்டன் கிராசிங் பென்னிங்டன் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 4x6 அங்குல அளவில் ஒரு விண்கல் தாக்கியது. இதனால் அவ்வீட்டின் கடினமான மரத்தாலான தரைப்பகுதி சேதம் அடைந்தது. அப்போது அவ்வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.

விண்கல் மனிதர்கள் மீது விழும் சம்பவம் முதன்முதலாக 1954-ல் நடந்தது. இதில் 3.6 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் அமெரிக்காவில் ஒரு பெண் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.

Tags:    

Similar News