உலகம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலி- இருவர் காயம் எனத் தகவல்

Published On 2024-03-05 03:40 GMT   |   Update On 2024-03-05 03:40 GMT
  • லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
  • பணிபுரிந்து வந்த ஏழு வெளிநாட்டினர் காயம் அடைந்தனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜார்ஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு, ஜிவ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News