சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்
- சீன அதிபர் ஜின்பிங் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
- சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது.
பீஜிங்
சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை அதிபராக இருக்கலாம்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். 2017-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த மாநாடு நடக்கிறது.
மாநாட்டில், கட்சியின் சட்ட திட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் தற்போது, அதிபராக மட்டுமின்றி, ராணுவத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
இனிமேல், அவர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக உயர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நிறுவனர் மாவோ மட்டுமே கட்சி தலைவர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு பிறகு ஜின்பிங் தலைவர் ஆகிறார். ஏற்கனவே அவருக்கு 'முக்கிய தலைவர்' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜின்பிங் இன்னும் 5 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கோ அதிபராக இருப்பதற்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதுவரை, மறைந்த மாவோ மட்டுமே 2 தடவைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார். மாவோவுக்கு பிறகு அந்த பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.
இதுதவிர, கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், புதிய பிரதமர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏனென்றால், தற்போதைய பிரதமர் லி கேகியாங் ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.
கட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் ஜின்பிங்கின் கரம் வலுவடையும் என்றும், அவருக்கு சவால்களே இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.