உலகம் (World)

ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு.. அணுசக்தி எதிர்ப்பு முதல் பாதுகாப்பு அமைச்சர் வரை - யார் இவர்?

Published On 2024-09-27 14:25 GMT   |   Update On 2024-09-27 14:26 GMT
  • விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
  • முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 9 பேர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டனர்

ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியைச் (LDP) சேர்ந்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) தலைமையிலான ஆட்சி கடந்த 2021 அக்டோபர் முதல் நடந்து வந்தது. ஊழல் மற்றும் மோசடி புகார்களில் சிக்கிய கிஷிடாவின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

 

இதனால் மக்களுக்கு தன் மீது நமபிகை இல்லையென்றால் சுமுகமான ஆட்சியை வழங்க முடியாது என்று கூறி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கிஷிடா கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதன்படி கிஷிடா பதவி விலகிய நிலையில் ஆளும் கட்சியில் சார்பில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் இன்று [செப்டம்பர் 27] பிற்பகலில் நடைபெற்றது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 9 பேர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டனர். அதில் 3 பேர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகிய நிலையில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜப்பான் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) (67வயது) அதிக வாக்குகள் பெற்று கட்சி உறுப்பினர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இதன்படி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி ஜப்பான் பிரதமராக பதவியேற்க உள்ளார். அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இஷிபா டோட்டோரி கிராமப்புற பகுதியை சேர்நதவர் ஆவார். 1986 இல் தனது 29 வது வயதில் LDP நாடளுமன்ற உறுப்பினரான இஷிபா பாதுகாப்பு மட்டுமின்றி விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவிகளையும் வகித்த கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.

மிதவாத போக்கை கொண்டுள்ள இஷிபா ஜப்பான் அணுசக்தியை சார்ந்திருப்பதை எதிர்ப்பவர் ஆவார். சீனா, வட கோரிய நாடுகளால் அதிகரித்து வரும் ஆபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவராக இஷிபா உள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பிரதமர் சின்ஷோ அபேவை எதிர்த்து  தோல்வியடைந்தார்.  இந்நிலையில் தற்போது பிரதமராகியுள்ள ஷிகெரு இஷிபா தலைமையிலான ஜப்பானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News