உலகம்

உக்ரைனுக்கு ஆதரவாக "வை ஃபை" தொடர்புக்கு பெயர்: மாணவருக்கு 10 நாட்கள் சிறை

Published On 2024-03-10 07:02 GMT   |   Update On 2024-03-10 07:02 GMT
  • மாணவர், "வை ஃபை" தொடர்புக்கு உக்ரைனுக்கு ஆதரவாக பெயரிட்டிருந்தது தெரிய வந்தது
  • "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24 அன்று, ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

இரு தரப்பிலும் கடுமையான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்ந்தாலும், 2 வருடங்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது "வை ஃபை" (wi-fi) தொடர்புக்கு, உக்ரைனை ஆதரிக்கும் வகையில் பெயரிட்டிருந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், மாணவரின் பல்கலைக்கழக தங்குமிடத்தில் சோதனையிட்டனர். அங்கு அவரது கணினியையும் "வை ஃபை" (wi-fi router) கருவியையும் பரிசோதித்ததில் "ஸ்லேவா உக்ரைனி" என அந்த மாணவர் இணைய தொடர்புக்கு பெயரிட்டிருந்தது தெரிய வந்தது.

"உக்ரைனுக்கு புகழ் சேரட்டும்" (Glory to Ukraine) எனும் பொருள்படும் வகையில் இப்பெயர் இருந்ததால், அவரை ரஷிய காவல்துறை கைது செய்தது.

வழக்கு விசாரணைக்கு பிறகு, பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்த கூடிய குற்றச்செயலாக இதனை நீதிமன்றம் கருதியது.

இதையடுத்து, நீதிமன்றம் அந்த மாணவருக்கு 10-நாள் சிறைத்தண்டனை வழங்கியது.

ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் நடக்கும் போரை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என்றுதான் ரஷியர்கள் அழைக்க வேண்டும் எனும் சூழ்நிலை ரஷியாவில் நிலவுகிறது. மாறாக, "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போரை எதிர்த்தும், உக்ரைனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கருத்து தெரிவித்தும் வந்த நூற்றுக்கணக்கான ரஷியர்கள் அந்நாட்டில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News