சிங்கப்பூர் வணிக வளாகத்தில் தமிழரை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொன்ற வாலிபர்
- சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது.
- வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் சென்றார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வணிக வளாக படிக்கட்டில் சென்று கொண்டு இருந்த போது முகமது அஸ்பரி அப்துல் கஹா (27) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது அஸ்பரி திடீரென தேவேந்திரன் சண்முகத்தின் நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்த தேவேந்திரன் சண்முகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை.
அங்குள்ள இரவு விடுதி முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை அந்த விடுதி நிர்வாகம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.