காசா மீதான போர் பல மாதங்கள் நீடிக்கும் இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார்
- காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
- இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். போரால் காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
காசா மீதான போரை உடனே நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, 'காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
காசாவில் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் வீட்டிற்கு அழைத்து வர உறுதியளிக்கிறேன். இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய நேரம் தேவை. ஹமாஸ் அகற்றப்பட்டு பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் பல மாதங்களுக்கு தொடரும். காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம். நாங்கள் படிப்படியாக ஹமாசின் திறன்களை அழித்து வருகிறோம். அந்த அமைப்பின் தலைவர்களையும் ஒழிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.