உலகம்

நொறுங்கிய ஆஸ்பத்திரிக்குள் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

Published On 2023-02-08 06:12 GMT   |   Update On 2023-02-08 07:23 GMT
  • துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து காயம் அடைந்தோரையும், இறந்து கிடப்போரையும் மீட்டு வரும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
  • சிரியா மட்டுமின்றி நிலநடுக்கம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்னும் எத்தனை, எத்தனை சோக சம்பவங்கள் நடந்துள்ளதோ என்று எண்ணும் போது இதயம் கனக்கிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி விட்டது.

சீட்டு கட்டுகள் போல் பொல, பொலவென சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்தோர், என்ன நடந்தது என தெரியாமலேயே உயிரை இழந்தனர்.

இதனை விட சோகம் ஒன்றுமறியா குழந்தைகள் பலியான பரிதாபம் தான். அவர்களில் பலரும் பெற்றோரின் அரவணைப்புக்குள் இறந்து கிடந்த காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து காயம் அடைந்தோரையும், இறந்து கிடப்போரையும் மீட்டு வரும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

இதில் சிரியாவின் அப்ரின் நகரில் மீட்பு பணிக்கு சென்ற குழுவினர் பகிர்ந்த வீடியோ பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.

சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் ஆஸ்பத்திரி ஒன்று இடிந்து விட்டதாகவும், நோயாளிகள் பலரும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதாகவும் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் குழுவினர் முதலில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து ரத்தம் சொட்டுவதை கண்டனர். உடனே அந்த பகுதியில் இருந்த இடிபாடுகளை நீக்கி அதன் அடியில் யாராவது இருக்கிறார்களா? என்று மீட்பு குழுவினர் பார்த்தனர்.

அங்கு இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை மெதுவாக வெளியே எடுத்த போது அவரது அருகே பச்சிளங்குழந்தை ஒன்று லேசான காயங்களுடன் முனங்கி கொண்டிருப்பதை கண்டனர்.

அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தாயோடு இணைந்தே இருந்தது. இதனை கண்ட மீட்பு குழுவினர் ஒரு வினாடி அதிர்ந்து போனார்கள். அடுத்த வினாடி சுதாரித்து கொண்டு அந்த பச்சிளங்குழந்தையை கைகளில் அள்ளி எடுத்து மார்போடு அணைத்தப்படி வெளியே மீட்டு வந்தனர்.

தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளங்குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மீட்பு காட்சிகள், குழுவினருடன் சென்றவர்களால் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியானது. அதனை பார்த்து இயற்கையை சபிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல கோடி பேரின் நெஞ்சை அந்த காட்சிகள் உலுக்கி விட்டது.

இது பற்றி மீட்பு குழுவினர் கூறும்போது, குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர் சிரியாவின் அலப்போநகரை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிகிறது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்தவராக இருக்கலாம் எனவும் கருதுகிறோம். இதுபற்றி விசாரித்து வருகிறோம், என்றனர்.

சிரியா மட்டுமின்றி நிலநடுக்கம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற இன்னும் எத்தனை, எத்தனை சோக சம்பவங்கள் நடந்துள்ளதோ என்று எண்ணும் போது இதயம் கனக்கிறது.

Tags:    

Similar News