உலகம்

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் அஜித் தோவல் சந்திப்பு

Published On 2024-03-12 09:46 GMT   |   Update On 2024-03-12 09:46 GMT
  • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
  • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

ஜெருசலேம்:

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News