உலகம்

இலங்கை தேர்தலில் வெற்றி- முறைப்படி அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே

Published On 2022-07-20 07:39 GMT   |   Update On 2022-07-20 07:43 GMT
  • இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.

புதிய அதிபர் தேர்வு 20-ந்தேதி (இன்று) பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்தார்.

அவருக்கு ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுன (ஜெ.வி.பி.) தலைவர் அனுரா குமார திஸ்சநாயகே ஆகி யோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். நேற்று அதிபர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வ தற்காக பாராளுமன்றம் கூடியது.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான பிரேமதாசா போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார்.

மேலும் டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து நேற்று ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப் பெருமா, அனுராகுமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேரின் பெயரும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிபர் தேர்வுக்காக ரகசிய வாக்களிப்பு 20-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு தொடங்கியது. எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இடைக்கால அதிபராக இருந்தநிலையில், 134 எம்பிக்கள் ஆதரவுடன் முறைப்படி அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வாகியுள்ளார்.

222 எம்பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்பிக்கள் வாக்களித்தனர். 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் முடியும் 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News