உலகம் (World)

லீவு கொடுக்க மறுத்த மேனேஜர்.. அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் ஊழியர்

Published On 2024-09-27 11:56 GMT   |   Update On 2024-09-27 11:56 GMT
  • Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது.
  • பெண்ணின் உயிரிழப்புக்கு நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் உழன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது. கடந்த வாரம் புனேவின் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பணிச்சுமை மற்றும் பணியிட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

 

மேலும் உ.பியில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் [Samut Prakan] மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே [May] என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 5 முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.

வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேலும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த  நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News