95 வயதிலும் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற இங்கிலாந்து டாக்டர்
- இங்கிலாந்து 'சர்ரே' நகரில் வசித்து வருபவர் டேவிட் மார்ஜோட்.(வயது95)
- இவர் ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் ஆவார்.
72 ஆண்டுகளுக்குப்பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து 'நவீன ஐரோப்பிய தத்துவத்தில்' எம்.ஏ முதுகலைப்பட்டத்தை தற்போது பெற்று உள்ளார்.
95 வயதில் மிகப் பழமையான பட்டதாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் பரிசீலனை செய்து வருகிறார்.
இதுகுறித்து மார்ஜோட் கூறும் போது, "பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் மனநல மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தத்துவம் மற்றும் நவீன தொழிலில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்காக மீண்டும் கல்விக்குச் செல்ல முடிவு செய்தேன்."
"நான் வாழும் காலநேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன். உள்ளூர் பேப்பர் ஒன்றில் கிங்ஸ்டன் பல்கலைக்கழக படிப்புக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். அதை தொடர்ந்து விண்ணப்பம் செய்தேன்."
"பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் எனக்கு படிக்க மிகவும் உதவியாக இருந்தனர். இது ஒரு அற்புதமான பாடமாக இருந்தது. மற்றும் கற்பித்தல் சிறப்பாக இருந்தது. அதனால் எளிதில் முதுகலைப்பட்டம் பெற முடிந்தது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் ஆசை இருக்கிறது," என்று தெரிவித்தார்.
டாக்டர் மார்ஜோட் தனது பட்டமளிப்பு நாளில் அவரது மகன் மற்றும் மருமகனுடன் மேடையைக் கடக்கும்போது அவரது நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு, கைத்தட்டலை பெற்றார்.