உலகம்

நிதானத்தை கடைபிடியுங்கள்: நேதன்யாகுவிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்

Published On 2024-04-17 09:59 GMT   |   Update On 2024-04-17 09:59 GMT
  • சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
  • பதிலடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. சூளுரைத்ததுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. அதேபோல் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.

ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தாங்களும் தயார் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் டெலிபோன் மூலம் பேசினார். அப்போது ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்த கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளது. உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளது. பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நேதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News