வரும் நாட்களில் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம்- அமெரிக்கா எச்சரிக்கை
- அமெரிக்கா ஒப்புதலை தொடர்ந்து ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இதற்கு பதிலடியாக ரஷியா புதிய வகை ஏவுகணையை உக்ரைன் மீது செலுத்தி சோதனை நடத்தியது.
உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.
இதனைத்தொடர்ந்த உக்ரைன் ரஷியா மீது தாக்குதல் நடத்தியது. இதை ரஷியா வெற்றிகரமாக முறியடித்தது. அதேவேளையில் ரஷியா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன குற்றம்சாட்டியது.
ஆனால், நாங்கள் ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணையை சோதனை செய்தோம். இந்த ஏவுகணை உக்ரைன் பகுதியை தாக்கியதன் மூலம் சோதனை வெற்றி பெற்றது என புதின் அறிவித்தார்.
இந்த நிலையில் உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைன் போரில் கேம் சேஞ்சராக ஒரேஷ்னிக் இருப்பதைவிட, அமெரிக்காவை மிரட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் பார்க்கிறார்கள்.
ரஷியாவிடம் ஒருசில ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற ஏவுகணைகளை விட சிறிய வகை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டடு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.