புதுச்சேரி

கோப்பு படம்.

108 ஆம்புலன்ஸ் வராததால் பெண் இறந்த பரிதாபம்

Published On 2023-11-20 08:54 GMT   |   Update On 2023-11-20 08:54 GMT
  • சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது
  • வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

புதுச்சேரி:

பாகூர் பழைய காமராஜ் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சோபனா (54). இவரது சொந்த ஊர் விருத்தாசலம் ஆகும். கடந்த 1 ½ ஆண்டுகளாக சோபனா பாகூரில் வசித்து வந்தார்.

இவரது சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாதந்தோறும் மருத்துவபரிசோதனைக்காக இன்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்ல வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

அப்போது திடீரென சோபனாவுக்கு மயக்கம் வந்ததால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர்.

உடனே இது குறித்து பாகூர் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராதால் பொதுமக்கள் மருத்துவ மனைக்கு சென்று பார்த்தனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் கடந்த 3 நாட்களாக பஞ்சராகி இருப்பதை கண்டனர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து கரிக்கலாம் பாக்கம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சோபனாவை கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஷோபனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குறித்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News