புதுச்சேரி

வாரிய தலைவர் பதவி கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்கொடி

Published On 2023-10-27 09:52 GMT   |   Update On 2023-10-27 09:52 GMT
  • ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
  • புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

முதலமைச்சர் ரங்கசாமியோடு என்ஆர்.காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள், துணை சபாநாயகர், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் உள்ளனர்.

அரசு பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டு ஆட்சி அமைந்தது முதல் கடந்த 2 ½ ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை.

இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு தங்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா மேலிடத்திடம் கேட்டு வருகின்றனர்.

பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், தன்னைவிட தனது தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக புகார் செய்தார். தனது தொகுதி பணிகளை நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார்.

முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் அடங்குவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை மேலிட பொறுப்பாளரிடம் மனக்குமுறலாக வெளிப்படுத்தினர்.

வாரிய பதவி இல்லாமல் மக்களை எப்படி சந்திப்பது? வாரிய பதவி இருந்தால் தொகுதியை சேர்ந்த கட்சியினருக்கும், தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் சலுகைகள் அளிக்க முடியும். இப்போது ஒன்றுமே செய்ய முடியவில்லை.

பா.ஜனதா அமைச்சர்கள் வகிக்கும் துறைகளில் வாரியங்கள் உள்ளது. அந்த வாரிய பதவியை அளிப்பதில் என்ன பிரச்சினை? பா.ஜனதா அமைச்சர்களே வாரியம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் பிரதான அங்கமாக இருக்கும். அப்படியிருக்க கட்சியில் உள்ள அந்த சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கினால்தான் அப்பிரிவு மக்கள் ஓட்டுக்களை நாம் பெற முடியும்.

நாங்கள் கேட்கும் போதெல்லாம் முதலமைச்சர் தரவில்லை என தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அப்படியானால் அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தரலாம். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்களின் வலியும், சூழ்நிலையும் புரியும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தருவதால் எங்களுக்கு எந்த சலுகையும் தர மறுக்கின்றனர்.

தொகுதியில் உள்ள கோவில் கமிட்டிக்கு கூட நிர்வாகிகளை நியமிக்க போராட வேண்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தொகுதியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தற்போது நெருக்கடி அளித்தால் வாரிய பதவி கிடைக்கும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். இதனால பா.ஜனதா மேலிடம் எம்எல்ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News