2023 ரீவைண்ட் - ஆழ்கடல் சுற்றுலாவில் அதிர வைத்த விபத்து
- டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
- 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது
2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.
இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.
ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.
இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.
5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.