

சூரியனும் சூரியகாந்தியும்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போராடும் இளைஞனின் கதை.
கதைக்களம்
கிராமத்தில் வாழ்ந்து வரும் அப்புக்குட்டி இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருக்கு தயாரிப்பாளர் சந்தான பாரதியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, சாதி வெறிப்பிடித்த சிலரால் காதல் ஜோடிகள் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள் என்ற கதையை அவரிடம் சொல்கிறார்.
அந்த கதையில் நாயகன் சூரியன், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளான நாயகி சூரியகாந்தியை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு சாதியால் பிரச்சனை வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களது சுயலாபத்திற்காக சாதியை பயன்படுத்திக் கொள்ளும் சாதி வெறிப்பித்த சிலர், சூரியகாந்தியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையே, தொலைந்து போன சூரியனின் கைப்பேசி மூலம் நண்பர்களாகும் கருப்பு மற்றும் அய்யனார், சூரியன் மற்றும் சூரியகாந்தியின் காதலுக்கு உதவ நினைக்கிறார்கள்.
இறுதியில் சூரியனும், சூரியகாந்தியும் ஒன்று சேர்ந்தார்களா?, இந்த கதை மூலம் அப்புக்குட்டியின் இயக்குனர் கனவு நினைவானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அப்புக்குட்டி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சினிமா கனவோடு இருப்பவர்களின் பிரதிபலிப்பாக அப்புக்குட்டி நடித்து இருக்கிறார். ஸ்ரீஹரி, இயக்குநர் ஏ.எல்.ராஜா, விக்ரம் சுந்தர் ஆகியோர் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கதையில் வரும் சூரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் சுந்தர் மற்றும் சூரியகாந்தியாக நடித்திருக்கும் ரிதி உமையாள் இருவரின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் ராஜசிம்மன் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
இயக்கம்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போராடும் இளைஞனின் கதையை மையமாக வைத்து அதில் காதல் கதை மற்றும் சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை சுட்டிக்காட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.ராஜா. அனைத்து சாதியிலும் சுயநலம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், சுயலாபத்திற்காக சாதியை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் அழுத்தமாகவும் இருந்திருந்தால் நல்ல படமாக அமைந்தது இருக்கும்.
இசை
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவி பிரியனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
திருவாரூர் ராஜாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே படமாக்கி இருக்கிறார்.
தயாரிப்பு
டிடி சினிமா ஸ்டூடியா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.