என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
- இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது.
- இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று, சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.
இந்தக் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகிலுள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். மூலவர் இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான், சந்திரசேகர சுவாமி என்ற பெயர்களாலும், அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலின் முருகப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கர யந்திரம் இங்கே ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்து இக்கோவிலின் பழமையை உணர முடியும்.
ஒரு முறை இந்தக் கோவிலின் வழியாக ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாகச் சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் செய்யும் தர்ப்பணக் காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள்.
ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவனை, முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.
தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது. பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னிதி உள்ளது. எனவே பழங்காலத்தில் 'காமத்தூர்' என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு:
இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது. துவஜஸ்தம்பம், நந்தி மற்றும் விநாயகர் சன்னிதி நுழைவு வாசலுக்குப் பிறகு உடனடியாகக் காணலாம். அடுத்ததாக கருவறையில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை அமிர்தாம்பிகை அருளாசி தருகிறார். அவர் நின்ற தோரணையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் முருகன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு ஆறு முகங்களும், 12 கைகளும் உள்ளன. தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலிலும் இதேபோன்ற முருகன் சிலை உள்ளது. திருப்புகழ் பாடல்களில் இந்த முருகப்பெருமான் போற்றப்பட்டுள்ளார்.
கோவில் வளாகத்தில் காமாட்சி தேவி சன்னிதி உள்ளது. இவளை 'திரிபுரசுந்தரி' என்றும் அழைப்பர். ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசங்கரர், இந்த அன்னையின் சன்னிதியில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி இருக்கிறார். இந்த அன்னை சன்னிதியின் துவாரபாலாகியின் சிலைகளில், பல இடங்களில் தட்டும்போது பல்வேறு இசைக் குறிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த அன்னையின் சன்னிதிக்கு எதிரே, பச்சைக் கல்லால் ஆன யாழியைக் காணலாம்.
கோவில் வளாகத்தில் நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு நடராஜப் பெருமானின் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்டது. இங்கே அவரது இடது கால் தரையில் உள்ளது. வலது கால், இடது காலுக்கு பின்புறம் மடங்கிய வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான நடன முத்திரை 'சதுர தாண்டவம்' என்று அறியப்படுகிறது. நடராஜருக்கு அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் சகஸ்ர லிங்கமும் உள்ளது. இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
சிவாலய காவலரான பைரவர் கம்பீரமாக நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். உலகின் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் நவக்கிரக நாயகர்களின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார் சிவபிரான். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான்.
சந்திரனின் கலைகளில் ஒன்றை தன் சிரத்தில் ஏற்று, சந்திரசேகரராகத் திருநாமம் கொண்டார் இந்த மூலவர். சோமவாரம் தான் சிவ வழிபாட்டுக்கு சிறந்த நாள். சோமன் (சந்திரன்) வழிபட்டுப் பலனடைந்ததன் காரணமாக, திங்கட்கிழமைகளில் சந்திரசேகரைத் தரிசித்து வழிபடுவது பெரும் பலன் அளிக்கும். சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காமக்கூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரர் பெருமானை, ஒருமித்த சிந்தனையுடன் கைகுவித்து தொழுதால் விருப்பம் அனைத்தும் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் யெ்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஆரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, காமக்கூர் திருத்தலம். ஆரணியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.
பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
- சிவன், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.
- ண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார்.
சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.
எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், ""நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்," என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார்.
முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் "ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?" எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். வயலில் வேலை செய்ததால் "விவசாயி" என்றும் பெயர் பெற்றார்.
இசைக்கும் திருமால், பிரம்மா:
நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இசைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரையும் "இசையமைப்பாளர்" என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
தெட்சிணாமூர்த்தி சிறப்பு:
பொதுவாக தெட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், இந்தக் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) உள்ள தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவரிடம் வேண்டிக்கொண்டால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் நீர் இறைத்த கலம்:
சிவன், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. பங்குனி 20ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனி சன்னதியில் இருக்கிறாள். சண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார். புடைப்பு சிற்பமாக உள்ள விநாயகரை, நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு துர்க்கைக்கு தனி சன்னதி இருக்கிறது.
திருவிழா: வைகாசியில் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்.
இருப்பிடம்: கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ்வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.
சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்,
திருத்திணை,
கடலூர் மாவட்டம்.
- இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும்.
- காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற சிவபெருமானின் 274 சிவாலயங்களில் இது 188-வது ஆலயமாகும். மேலும் தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124-வது தலமாகும்.
சிவபெருமான், தேவலோகத்தில் வீற்றிருக்கும் வடிவமே, 'விடங்க வடிவம்' ஆகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டும் என்று சிவபெருமான் விரும்பினார். அதற்காக ஒரு திருவிளையாடலை அவர் நிகழ்த்தினார். அதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறாகவும் அமைந்திருக்கிறது. அதைப் பார்ப்போம்.
தல வரலாறு
தேவலோகத்தின் அதிபதியான இந்திரன், ஒரு முறை சிவபெருமானிடம் விடங்க வடிவத்தை யாசித்தான். அப்போது சிவன், "இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கடினம்" என்று கூறினார். இருப்பினும் இந்திரன் விடாமல் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், அந்த லிங்கத்திற்கு நல்ல முறையில் பூஜைகளை செய்வித்து வந்தான்.
இந்த நிலையில் முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர், பூலோகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது மக்கள் பலரும் மிருகங்களால் துன்பப்பட்டனர். இதனால் அவர் வனத்திற்குள் வேட்டைக்குச் சென்று மிருகங்களை கட்டுப்படுத்த எண்ணினார். அதன்படி வேட்டையாடுவதற்காக காவிரி கரைக்கு வந்தாா்.
ஒரு நாள் சிவராத்திரி இரவில் முசுகுந்த சக்கரவர்த்தி, வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சில முனிவர்கள் சென்றனர். அவர்களிடம் மன்னன், 'எங்கு செல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அந்த முனிவர்கள், "நாங்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப் போகிறோம்" என்று கூறினர். சிவராத்திரி அன்று மிருகங்களை வேட்டையாட சாஸ்திரம் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதனால் வருத்தம் அடைந்த முசுகுந்த மன்னன், தன்னுடைய ராஜ உடையை களைந்து, முனிவர்களின் உடையை தரித்து, அந்த முனிவர்களுடனேயே, சிவ பூஜை செய்வதற்காகச் சென்றார். தன் தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்தார்.
அப்போது ஈசன், "இந்திரனிடம் இருக்கும் விடங்க வடிவ சிவலிங்கத்தை எப்படியாவது வாங்கி வந்து, பூலோகத்தில் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். அந்த சமயத்தில் வாலாசுரன் என்ற அசுரனை கொல்பவர்களுக்கு, தன்னிடம் உள்ள ஐராவத யானை, வெண்குடை தவிர எதைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் அறிவித்திருந்தான்.
எனவே வாலாசுரனைக் கொன்று, விடங்க லிங்கத்தை இந்திரனிடம் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரும்படி, சிவபெருமானே மன்னனுக்கு யோசனையும் கூறினார்.
உடனே முசுகுந்த சக்கரவர்த்தி, "இறைவா.. அப்படியே செய்கிறேன். ஆனால் இந்திரன் விடங்கரைப் போலவே உள்ள வேறு ஏதாவது ஒரு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது அல்லவா? எனவே எனக்கு முதலில் உங்களுடைய விடங்க வடிவம் எப்படி இருக்கும் என்பதை காண்பித்தருள வேண்டும்" என்று வேண்டினார்.
சிவபெருமானும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு தன்னுடைய விடங்க லிங்க வடிவத்தைக் காட்டி அருளினார். அப்போது அங்கு பெரும் ஒளி வெள்ளம் தோன்றியது. முசுகுந்தன், அவருடன் இருந்த முனிவர்கள் மட்டுமின்றி தேவலோகமே அங்கு திரண்டு விட்டது.
இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், "இறைவா.. தாங்கள் இந்திரலோகத்திலும் இருங்கள், இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உங்களுக்கு ஆலயம் எழுப்புகிறேன்" என்றார். முனிவர்களும், தேவர்களும் கூட ஈசனை மன்றாடியதால், கலியுக பக்தர்களுக்காக ஈசன் இங்கு விடங்க வடிவத்தில் தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.
மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிசுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், பைரவர் சன்னிதிகளும், கருவறை சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், மகாலட்சுமி ஆகியோரும் காட்சி தருகின்றனர். நடராஜர் சபையும் உள்ளது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக பலா மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள இறைவனைப் பற்றி சமயக்குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப் பாடல்களை பாடியுள்ளனர்.
இந்த திருத்தலத்தில் சூரிய பகவானும் வழிபாடு செய்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மற்றும் இறைவியை தன்னுடைய கதிர்களால் சூரியன் வழிபடும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவது அதிசயமானது. இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது மற்றொரு விசேஷம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர். அவர்களை வழிபட்டால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர். மூலவருக்கு தெற்கு பக்கம் தியாகராஜா்- நீலவிடங்கராகவும், வடக்கே வேதாரண்யேஸ்வரரும் உள்ளனர். கோவிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம். செல்வ வளம் பெருகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலில் சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, வைகாசி விசாகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்குவளை என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் திருவாய்மூர் திருத்தலம் இருக்கிறது.
- இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இத்தலம் வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் பெருமானாலும், திருஞானசம்பந்த பெருமானாலும் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமை போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவில் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இக்கோவில் இறைவன் மாணிக்க வண்ணர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
5 நிலை ராஜகோபுரம்
வடமொழி பெயராக இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த கோவில் அன்னைக்கு வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயரும் உள்ளது.
கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் இரு பிரகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ்ந்த திருத்தலமாக உள்ளது. இத்தலம் மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பகுதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் என பெயர் ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற மன்னன்
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடந்தபோது, சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்க திருமேனியின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதை அறிந்த மன்னர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இறைவன் இருப்பதை அறிந்தார். பின்னர் அந்த இடத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் மழையில்லாததால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளை புறந்தள்ளினர். இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியை போக்க முடியாமல், மக்களை நீதி நெறியுடன் நடத்த முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் எனக் கருதி தூக்கிட்டு் தற்கொலைக்கு முயன்றார்.
தன்னலம் கருதாமல், தன் குடிமக்களின் நலனுக்காக தன்உயிரையும் துறக்க துணிந்த மன்னனைத் தடுத்து, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாணிக்க மழை பெய்ய செய்து மக்களின் வறுமையை போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாம்பு தீண்டியது
வைப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகன் இல்லாத அவர், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். மேலும் தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவர் வாக்களித்திருந்தார். காலப்போக்கில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த வணிகர் தனது 7 மகள்களில் 6 மகள்களை செல்வந்தர்களை தேடிப்பிடித்து மணம் செய்து வைத்தார்.
தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-வது பெண், தன் தந்தை தன்னையும் தன் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் என அறிந்து தன் அத்தை மகனுடன் மதுரைக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதன்படி அவர்கள் சென்றபோது வழியில் இக்கோவிலின் தெற்குவீதியில் அவர்கள் தங்கி இருந்தபோது பாம்பு தீண்டி மணமகன் உயிரிழந்தார். இதனால் பெரும் துயரம் அடைந்த மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
திருமணம்
அந்த பெண்ணின் அழுகுரல், அங்கு தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது துயரை கேட்ட திருஞானசம்பந்தர், மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடி இறந்து கிடந்த மணமகனை உயிர் பிழைக்க செய்தார்.
பின்னர் இறைவன் திருவருள்படி வண்டுவார்குழலி-மாணிக்கவண்ணர் முன்னிலையில் வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.
புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கை கரையில் வேள்வி மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூன்று உலகங்களுக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச்செய்ய முடிவெடுத்தனர்.
திருமால் மார்பில் உதைத்த முனிவர்
அதன்படி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். உடனடியாக பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியை போக்க கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்து விட்டார்.
தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.
பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோவிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்ற தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.
வரலட்சுமி நோன்பு
ஆவணி மாதம் பவுர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம்.
இதன்படி இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.
குடமுழுக்கு
மேலும் மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபட்டால் மீண்டும் கூடி வாழ்வது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
இக்கோவிலின் முக்கியப் பெருவிழா, சித்திரை திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி உள்ளன.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையி்ல் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து நாகூர் திட்டச்சேரி வழியாக திருமருகலை அடைந்து ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று தாிசனம் செய்யலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- முத்தாரம்மன் வழிபாடு சிறப்பானது.
- ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருநெல்வேலியில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும். முத்தாரம்மன் வழிபாடு சிறப்பானது. கிராமங்களில் அம்மைப் போடுவதை முத்து போடுவதாக கூறுவார்கள். அப்படி போட்டிருக்கும் 'முத்தை' (அம்மை நோயை) 'ஆற்ற'க்கூடிய அம்மன் என்பதால் 'முத்து ஆற்று அம்மன்' என்பது நாளடைவில் 'முத்தாரம்மன்' என கூறலாயிற்று. அதனால்அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன் மைலாடி என்னும் ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்புமாறு கூறினார். அதேபோல அர்ச்சகரின் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடுமாறு கூறினார். அம்மன் கனவில் சொன்னது படியே அனைத்தும் நடந்தது. தன் உருவத்தை தானே வடிவமைத்துக் கொண்ட அம்பாளுக்கு இங்கே கோயிலமைத்து வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடன மாடி திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள்தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர். புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களைக்கட்டும். கொண்டாடி விட்டு 10-ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.
இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர். மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள், வியாபாரம் விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை, அங்க பிரதட்சணம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலன் அடைகின்றனர்.
கோவில் அமைப்பு :
அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்புரியும் காட்சி காண கிடைக்காத ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் சுயம்புவாக தோன்றி திருமேனிகள் சிறிய அளவில் இன்றளவும் உள்ளது, ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம். அன்னையின் சிரசில் ஞானமூடி சூடி கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து , மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்து , கழுத்தில் தாலிக்கொடியுடனும், வலது காலை மடித்து சந்திரகலையுடன் கேட்டவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறாள் நம் அன்னை முத்தாரம்மன்.
அருகில் அமர்ந்திருக்கும் அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் ( கதாயுதம் ) தாங்கியும் மறுகையில் விபூதி கொப்பரையும் வைத்து இடது காலை மடித்து சூரியகலையுடன் பக்தர்களுக்கு கேட்ட வழக்கு மற்றும் எதிரி பிரச்சினைகளில் வெற்றியை கொடுக்கிறார். கோவிலின் மகா மண்டபத்திற்குள் பேச்சியம்மன், கருப்ப சுவாமி, பைரவர் ஆகியோரும் சிலைவடிவாக காட்சி அளிக்கின்றனர், கோவில் எதிரில் அமர்ந்திருக்கும் கொடிமரம் 32 அடி உயரம் கொண்டது. செப்புத்தகட்டினால் கொடிமரம் வேயப்பட்டுள்ளது.
- இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
- இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார். பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர்.
பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள்.
அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். அவர், லட்சுமி தேவியிடம் "ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?" என்று கேட்டார். லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.
வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள். உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.
அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர். பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு :
கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள். இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.
இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர்.
இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார்.
அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.
அமைவிடம் :
எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.
- மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார்.
- தீப ஆராதனையின் போது இலிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு.
மூலவர் – ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர்
உற்சவர் – சந்திரசேகர்
அம்மன் – இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை
தல விருட்சம் – வில்வம்
தீர்த்தம் – மதுரா தீர்த்தம்
மாவட்டம் – காஞ்சிபுரம்
சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏறஏற, வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் கலயம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரைப் பருகக் கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் "நீங்கள் யார்?" என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றிக் கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி, தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான்.
இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை. இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்" என்றெண்ணிக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, "இடைச்சுரநாதா" என்று வணங்கி, பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்" என்ற பெயரும் பெற்றார்.
பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கிப் பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்" என்றும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை" (கோ – பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.
பொதுவாக அம்பாள் தன் பாதங்களை ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலைப் பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.
"திருஞானசம்பந்தன், நீ கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.
இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வணங்கிச் சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது. தீப ஆராதனையின் போது இலிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு. ஜோதி ரூபனாக சுவாமியை தரிசித்தால் தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார்.
பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் "காட்சிக்குளம்" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
தலவிநாயகர்: வரசித்தி விநாயகர். கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.
திருவிழா:
சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்ஸவம்.
பிரார்த்தனை:
இங்கு வேண்டிக்கொள்ள முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர்.
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவடிசூலம்,
திருஇடைச்சுரம்,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
- மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
- சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.
முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்
சரக்கொன்றை மலர்கள்
மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை பகுதி. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து ஆசி வழங்க தொடங்கினார்.
சிவலிங்க திருமேனியில் சிலந்தி
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் தினமும் அயவந்தீஸ்வரரை, கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவபூஜையின்போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதை கவனித்தார், மங்கையர்கரசியார்.
எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது? என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும், மீண்டும் பலங்கொண்டபடி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.
மனைவியை விட்டு சென்றார்
"உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டு விட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்" என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் இல்லம் திரும்பினார்.
மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். "இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் கணவர் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே" என சிவபெருமானே கதி என இருந்தார்.
அன்னையாக ஏற்றார்
அன்று இரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன். "திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பார்்" என்றார். விழித்தெழுந்த திருநீலநக்கர் விடியும் முன்பே கோவிலுக்கு ஓடினார். கோவிலில் கருவறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்த துயரை கண்டு திருநீலநக்கர் கண் கலங்கினார். .
"சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்" என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். திருநீலநக்கரும் அவரது மனைவியும் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே ஏற்றுக்கொண்டதை எண்ணி உள்ளம் பூரித்தார்.
மங்கையர்கரசியாரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார். இத்தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கோவில் உட்புறத்தோற்றம்
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர்கரசி ஆகியோர் உள்ளனர்.
மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
மூல நட்சத்திரம்
தனியாக இருக்கும் அன்னை சன்னதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டிகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர். வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கிறது.
முற்காலத்தில் செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி மக்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்த பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிறுமி பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.
சிறுமி வடிவில் அம்மன்
"என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தை கண்டு மெய்சிலிர்த்த பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்? என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்த கூட்டமும் அவளை பின் தொடர்ந்தது.
சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்ற ஒரு திருநாமமும் உண்டு.
திருமணத்தடை நீக்கும் ஆவணி மூல நட்சத்திர வழிபாடு
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.
ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
- கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார்.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.
கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல, விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை 'கடல் திருப்பதி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.
கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, புஷ்கரணி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரியில் எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதி கோவிலிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபோக திருப்பதி லட்டு கன்னியாகுமரியிலும் கிடைக்குமா? முடி காணிக்கை வசதி செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தரிசன நேரம், பூஜை விவரம்
கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும்.
நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும்.
தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.
புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது. சத்தியலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து பிரம்மா, ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துவது பிரமோற்சவம். எந்த கடவுளுக்கும் இல்லாத வகையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. அங்குள்ள கோவிலில் தினமும் காலை, மாலையில் உற்சவர் மலையப்பசாமி வலம் வருவார். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
அமைவிடம்
கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
- இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.
அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார்.
அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர். பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்.
தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது . மேலும் இங்குள்ள குருபகவான் இந்தக் கோவிலின் சிறப்பு. இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் . ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.
இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது.
முகவரி
அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில்,
கோவில்பாளையம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
- இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
- இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.
சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
கொல்லி மலை, கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.
அறப்பளீஸ்வரர் கோவிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.
கொல்லிப்பாவை கோவில்
தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோவில் உள்ளது.
சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.
கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி" எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் "அறப்பள்ளி ஈஸ்வரன்" என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் 'அறை' என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் "அறைப்பள்ளீஸ்வரர்" என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.
இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அறம் வளர்த்த இறைவி பள்ளிகொண்ட தலம் என்பதால் புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்றழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.
சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம்
உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.
ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில் வல்வில் ஓரி சிவாலயம் நிர்மாணித்தான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.
- சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
- கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களில் ஆத்தூரில் அமைந்துள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இந்த ஊர் `முன்னர் ஆற்று ஊர்' என்ற அழைக்கப்பட்டு பின்னர் மருவி `ஆத்தூர்' என்று வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிற்கால பல்லவ மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். பல கோவில்களை நிர்மாணித்தவர். சிதிலமடைந்த பல கோவில்களுக்கு திருப்பணிகள் பல செய்த பெருமை உடையவர்.
கோப்பெருஞ்சிங்கன் காஞ்சிக்கு அருகே நடைபெற்ற ஒரு போரில் வெற்றி வாகை சூடி பின்னர் வரதராஜப் பெருமாளை வழிபட்டார். கோவிலில் வரதராஜப் பெருமாள் தரிசனம் கொடுத்தார். அப்போது கோப்பெருங்சிங்கனின் மனதில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. இதே எண்ணத்துடன் காஞ்சியில் இருந்து புறப்பட்டு பாலாறு ஓரமாகத் தன் தலைநகரை நோக்கி பயணப்பட்டார்.
வழியில் நதிபுரம் என்ற ஆத்தூரில் தனது படைகளுடன் தங்குகிறார். தனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கோப்பெருங்சிங்கனின் கனவில் வரதராஜர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். பக்திப்பரவசத்துடன் பெருமாளே என்று விழித்துக் கொள்ளுகிறார் மன்னர். உடனே ஆத்தூரில் கல்யாணக் கோலத்தில் வரதராஜருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் ஆத்தூர் என்ற ஊரில் கல்யாண வரதராஜர் கோவில் உருவான வரலாறு இதுதான். சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
ராஜகோபுரமின்றி காணப்படும் இத்தலத்திற்குள் நுழைந்தால் விளக்குத்தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. இத்தலத்தின் மூலவர் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். துவாரபாலகர்கள் அமைந்திருக்கும் இடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் காட்சி தருகிறார்கள். அர்த்த மண்டபத்தில் தேசிகர், உடையவர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் முதலானோர் சிலா ரூபங்களில் எழுந்தருளியுள்ளார்கள். அருகில் விகனச மகரிஷியின் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே உள்ள அந்தராளத்தில் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நர்த்தனக்கண்ணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
கருவறையில் வரதராஜப் பெருமாள் கல்யாண வரதராஜராக ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இடது திருக்கரம் ஊருஹஸ்தமாகவும், கீழ் வலது திருக்கரம் அபயஹஸ்தமாகவும் அமைய பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.
சுற்றுப்பிரகாரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த சன்னிதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். மற்றொரு புறத்தில் ஒரு தனி சன்னிதியில் ஆண்டாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தெருவில் சற்று தள்ளி ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் இத்தலத்தில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது. இந்த ஆகம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விகனச மகரிஷி. இவருக்கு இத்தலத்தில் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி முதலான பல உற்சவங்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனி மாதத்தில் கருட சேவை உற்சவமும் விகனசமகரிஷிக்கு ஆடிமாதம் திருவோண நட்சத்திரத்தில் உற்சவமும் நடைபெறுகின்றன.
தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பட்டாச்சார்யாரின் வீடு அருகிலேயே உள்ளது.
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தூர் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
-ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்