search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • இது 500 வருடம் பழமையான கோவிலாகும்.
    • இந்த கோவிலில் உள்ள பைரவர் சுயம்புவாக கிடைத்த சிலையாகும்.

    இந்து மதத்தினா் பல்வேறு வடிவங்களில் இறைவனை வழிபட்டு வருகின்றனா்.

    அந்த வடிவங்களில் சாந்தமான அருள் சுரக்கும் வடிவமும், உக்கிர வடிவமும் பக்தா்களின் மத்தியில் பிரபலமானவை. உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும். அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவன் எடுத்த அவதாரங்களில் ஒன்று தான் காலபைரவா் அவதாரம். வேலூரை அடுத்த செங்காநத்தம் மலையில் உள்ள காலபைரவர் காசிக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி பிரவேசித்து, பத்து கைகளுடன் விளங்குகிறாா்.

    இதுபற்றி கோவில் நிா்வாகிகள் கூறியதாவது:-

    சுயம்புவாக

    வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை அடுத்துள்ள செங்காநத்தம் மலையில் இயற்கை சூழலில் காலபைரவர் கோவில் உள்ளது. இது 500 வருடம் பழமையான கோவிலாகும். முன்னோா்கள் காலத்தில் நிலத்தை செம்மைப்படுத்தும்போது சுயம்புவாக கிடைத்த சிலையாகும். அப்போது விஜயநகர பேரரசின் சந்திரகிாி மண்டலத்தின் ஒரு பகுதி தான் வேலூா். அதன் வடகிழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நோக்கி இருக்கும் வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை நிறுவியவா் விஜய நகர ஆட்சியாளா்கள்.

    காலபைரவரை செங்காநத்தம் ஊரை சோ்ந்த தர்மகர்த்தாக்கள் கேசவலு நாயுடு, நரசிம்மலு நாயுடு, பக்தவச்சலம் என ஒரு குடும்பம் வழிவழியாக பூஜைகள் செய்து பராமாித்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறாா்.

    கால பைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கம்பீரத்துடன் காட்சியளித்துள்ளது. தானாகவே இந்த பைரவா் சிலைக்கு பின்னால் அழிஞ்சில் மரம் உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளது. மரத்தின் அடியில் பத்து கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றாா். அத்துடன் தனது வாகனமான நாய்களுடன் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

    வேண்டுதல்

    முதலில் காலபைரவா் சிலையில் ஒரு கண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதை ஒரு சிற்பியை வைத்து சரி செய்தபோது திடீரென அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காலபைரவா் கோவிலுக்கு அடிக்கடி வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டதை தொடர்ந்து சிற்பி பழைய நிலைக்கு திரும்பினார்.

    ஒரு செல்வந்தா் தன்னுடைய 3 மகளுக்கும் திருமணமாகாமல் வயதாகி கொண்டு செல்கிறது என வருந்தியபோது அவரது கனவில் காலபைரவா் தோன்றியதாகவும், பின்னா் அந்த பக்தா் கோவிலுக்கு தினசாி வந்து காலபைரவரை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் 3 மகள்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணமானதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் ஒவ்வொரு மகள் திருமணத்தின் போதும் ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினாா் என்றுகூறப்படுகிறது.

    இயற்கையாக கிடைக்கும் திருநீறு

    இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது. பைரவரை தாிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.

    இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் அபிஷேகம் செய்து பல்வேறு நறுமண மலா்களால் அலங்காிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சித்திரை திருநாளில் கோவிலில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடக்கிறது. பெண்கள் பொங்கலிட்டும் , வீட்டில் இருந்து நோ்த்திகடனாக நெய்வேத்தியம் செய்தும் படைக்கின்றனா்.

    பொங்கலிட்டு கோழி, ஆடு பலியிடுவதற்கு முன்பு காலபைரவரின் தலை மீது மல்லிகை மற்றும் பல்வேறு வகையான பூக்களால் பூச்சரம் கட்டப்பட்டு அதன் மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்தப் பழம் தானாகவே அருகில் நின்றிருக்கும் ஊர் நாட்டாமை கையில் விழும். அப்போது தான் கோழி, ஆடுகளை பலியிட காலபைரவர் சம்மதித்ததாக கருதப்பட்டு அதன் பின்னர் பொங்கலிட்டு ஆடு பலியிடுவது நடக்கிறது.

    சனிக்கிழமையன்று காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா் தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும். இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 ராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.

    வழிபடும் முறைகள்

    திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டுதல் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி சாமி அருகே உள்ள பழைமையான மரத்தில் மஞ்சள் கயிறு மற்றும் தொட்டில் கட்டி பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா். அதுபோக கோவில் முன்பு பக்தா்கள் எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு, பூசணியில் திாி விளக்கு மற்றும் மிளகில் திாியிட்டு விளக்கேற்றி வழிபடுகின்றனா். இதனால் பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    ஒரு சில பக்தா்கள் பணக்கஷ்டம் நீங்கவும் மற்றும் இழந்த செல்வத்தை மீட்டெடுக்கவும் 108 ஒரு ரூபாய் நாணயம் மூலம் அபிஷேகம் செய்வதன் மூலம் பயன் பெறலாம். இடப்பிரச்சினை தீர தேங்காய் திரி விளக்கு ஏற்றலாம். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய மிளகு தீபம் ஏற்றலாம்.

    உக்கிரமானவர்

    காலபைரவரை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கே கட்டப்பட்டுள்ள மணியை அடித்து ஓசை எழுப்பும் போது எங்கிருந்தோ வரும் நாய்கள் வடக்கு நோக்கி வரிசையாக அமர்ந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு பக்தர்களோடு பக்தராக பைரவரை வணங்குகின்றன. மணியோசை நின்றவுடன் நாய்கள் வந்த வழியே சென்று விடுகின்றன. இதேபோல் ஒவ்வொரு அஷ்டமி பூஜையின் போதும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு கால பூஜையின் போது நாய்கள் ஒன்று சேர்ந்து மூலவர் முன்பு வந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு வணங்குகின்றன. காலபைரவர் உக்கிரமான தெய்வம் என்பதால் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். பெண்கள் பைரவர் பாதங்களை தொட்டு வணங்கக்கூடாது.

    வெளி மாவட்ட பக்தர்கள்

    பல்வேறு பிரச்சினைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரியான உடன் மன நிம்மதியுடன் அவர்களின் நேர்த்தி கடன்களை காலபைரவருக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். அந்த வகையில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காலபைரவரை தாிசிக்க வருகின்றனர். மேலும் திருச்சி, சென்னை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரு சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோழி, ஆடுகளை பலியிடுகின்றனர். இந்த கோவிலில் அன்னதானம், சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத்திற்கான உதவிகளை ரங்காபுரம் லட்சுமி ஸ்டீல் உாிமையாளா் ஆா்.மணி செய்து வருகிறாா். மேலும் சில பக்தர்களும் காலபைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் அன்னதானம் வழங்கும் பொறுப்பை செய்து வருகின்றனா்.

    கோவில் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வராஜ் யாதவ், ராகவன் நாயுடு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • 247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது.

    இன்று (14.4.2023) சித்திரை-1, தமிழ்ப் புத்தாண்டு.

    தமிழுக்கு பெருமை சேர்க்க பாண்டிய மன்னர் ஆட்சிக்காலத்திலேயே மலையில், 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 படிகளை அமைத்து, அதில் பக்தர்கள் ஏறிச்சென்று பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது.

    வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அந்த தலம் எங்கிருக்கிறது என ஆவல் ஏற்படுவதும் சகஜம்தான். இந்த கட்டுரையின் மூலமாக அந்த தலத்தை தரிசிப்போம்.. வாருங்கள்...!

    பெருமாளின் சயன கோலத்தில் ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதன் அருகேதான் காட்டழகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 9 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக சென்றால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமான செண்பகத் தோப்பை அடையலாம். அங்கிருந்து 7 கி.மீ. மலைப்பகுதியில் நடந்து சென்றால், பெருமாள் மலை வரும். அந்த மலை அடிவாரத்தில்தான் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள மலை தோற்றத்தை பார்த்தால் பெருமாள் சயன கோலத்தில் இருப்பது போலவே காட்சி அளிக்கும்.

    பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர், சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    சுந்தரராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் 247 படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 247 படிக்கட்டுகள் என்பது தமிழ் எழுத்துகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

    247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த தீர்த்தத்தில் இரும்பு மற்றும் கந்தக சத்துகள் நிறைந்துள்ளன.

    இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி விட்டு தமிழ் எழுத்துக்களுக்கு பெருமை சேர்க்கும் படிக்கட்டுகளில் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷமிட்டுக் கொண்டே படிகள் ஏறி, மூலவரை தரிசித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலானது வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் பூஜைகள் நடக்காது.

    அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

    சித்திரை, புரட்டாசி மாதங்களில் அன்னதானமும் நடைபெறும். இக்கோவிலின் மகிமை அறிந்து, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.

    இன்று சிறப்பு பூஜை

    தமிழ் வருடப்பிறப்பான இன்று (14.4.2023) காட்டழகர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதேபோல மழை பெய்து இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் பெருகினால் அழகருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பொதுவாக இந்த படி பூஜை மார்கழி மாதம் நடைபெறும்.

    • அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
    • திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர்.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முற்காலத்தில் இரணியன் என்ற அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    5 நரசிம்மர்கள்

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர். இந்த நரசிம்மர்களை அவர்கள் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத்தன்று அல்லது சனிக்கிழமைகளில் ஒரே நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும் என்பதில் ஐயம் இல்லை.

    திருமங்கை மன்னன் என்பவர் திருக்குரவலூரை தலைமை இடமாக கொண்டு அரசாட்சி புரிந்ததாகவும், ஒரு கட்டத்தில் மேற்கண்ட நரசிம்மர் மீது கொண்ட பற்றால் துறவறம் பூண்டு திருமங்கை ஆழ்வாராக திருநாமம் கொண்டு 5 நரசிம்மர்களுக்கும் பணிவிடை செய்ததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இன்றளவும் திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற பெருமாள் கோவில்கள் 108 வைணவ திவ்ய தேச கோவில்களாக அழைக்கப்படுகிறது.

    திருமங்கையாழ்வார்

    திருமங்கையாழ்வார் திருகுரவலூர் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர நரசிம்மர் மங்கை மடத்தில் கோவில் கொண்டு வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இவரை வணங்குபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குவதோடு வீரத்தை தருபவர் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் தினமும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த கோவிலில் அன்னதானம் வழங்கியதால் மங்கையர் மடம் என்றும் தற்போது அது மருவி தற்போது கோவில் உள்ள இடம் மங்கைமடம் என அழைக்கப்படுகிறது.

    பூமியின் வடிவம்

    உக்கிர நரசிம்மர், திருமங்கையாழ்வார் பிறந்த திருக்குரவலூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உக்கிர நரசிம்மரை வழிபட்டால் பித்ருக்கள் தோஷம், எதிரிகளால் பயம் நீங்கி செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகம். இவருக்கு மாதம்தோறும் அமாவாசை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    யோக நரசிம்மர் திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பூமியின் வடிவமாக கருதப்படும் இவரை வணங்கினால, பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்குவதோடு, வாழ்வில் மிகப்பெரிய யோகத்தை இவர் அருள்வாா் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ேயாகநரசிம்மருக்கு வில்வத்தை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்படும். இந்த நரசிம்மருக்கு வெல்ல பானகத்தை நெய்வேத்தியம் செய்து வழிபடுவது மிக உகந்ததாகும்.

    ஹிரண்ய நரசிம்மர், திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் ஆகாயத்தை நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டிருப்பது மிகவும் விசேஷமானது. இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவர், 8 கைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

    மகாலட்சுமி

    லட்சுமி நரசிம்மருக்கு திருவாலியில் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி வலதுபுரத்தில் அமர்ந்து கைகூப்பி காட்சியளிக்கிறார். தீர்த்த வடிவமான இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்கி, வேலைவாய்ப்பு கிடைப்பது நிச்சயம்.

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் வழிபடுவது பல்வேறு சிறப்புகளை தரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

    முக்கிய விழாக்கள்

    மங்கை மடம் வீர நரசிம்மர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம், திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும்.

    சர்வ தோஷங்களையும் நீக்கும் பஞ்சநரசிம்மர்கள்

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர். தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் பஞ்ச நரசிம்மர்களை தரிசனம் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வருகிறார்கள்.

    கோவில்களுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    • புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)

    தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

    தல விருட்சம்: முல்லைக்கொடி

    தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)

    முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.

    இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள். அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள்.

    முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இவ்வாறு பூவுலகத்தில் முதல் 'கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன். இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

    முல்லை வன நாதர் :

    முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வனநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

    சோமாஸ்கந்தர் :

    இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப்பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது. கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், 'ஷீரகுண்டம்' (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.

    குழந்தைச் செல்வம் :

    உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.

    மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

    இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

    அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

    நன்றிக் கடன் :

    பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது. சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு. அமைவிடம் :

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    • பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    இன்றைய திருக்கோவில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

    தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)

    தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்

    தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்

    விமானம்: பத்ர விமானம்

    கிரகம்: சுக்ரன் ஸ்தலம்

    திருத்தல வரலாறு:

    வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

    அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

    அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.

    வருணன் பாசம் பெற்ற வரலாறு:

    ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

    விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:

    முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

    பிரம்மனுக்கும், ஈசான்யருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோவிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோவிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.

    இத்திருக்கோவிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108 அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.

    மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வது அந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

    திருக்கோவில் அமைவிடம்:

    இந்த தென்திருப்பேரை திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

    • இந்த கோவிலில் வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    • இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோவில்கள் வரிசையில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக செம்பனார்கோவில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.

    மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் செம்பனார்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உப்புச்சந்தை என்ற கீழையூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் ஊரின் பெயரை கொண்டு உப்புச்சந்தை மாாியம்மன் என அழைக்கப்படுகிறார். மழையின்றி உலகம் இல்லை. மாரி இல்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஊர்தோறும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மேலப்பாதி கிராமத்துக்கும், கீழையூர் கிராமத்துக்கும் இடையே இக்கோவில் உள்ளது.

    தற்போது கோவில் உள்ள இந்த பகுதி முற்காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்தது. இங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்புகார் கடற்கரை உள்ளது. பூம்புகார் பகுதியில் உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்புகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து இந்த இடத்தில் குவித்து ஏலம் விடுவது வழக்கம். உப்பு ஏலம் தொடா்ந்து இந்த பகுதியில் நடந்ததால் இந்த ஊர் உப்புச்சந்தை என்று அழைக்கப்படுகிறது.

    தலவரலாறு

    பழங்காலத்தில் மன்னர்கள் பூம்புகார் கடற்கரைக்கு சென்று தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வது வழக்கம். இவ்வாறு மன்னர்கள் செல்லும்போது சேவர்களும் உடன் செல்வர். இந்த ்நிலையில் தஞ்சை மன்னரிடம் பணிபுரிந்த ஒருவர் தனது குடும்பத்துடன் பூம்புகார் சென்று விட்டு திரும்பி வரும்போது, கீழையூர் என்ற பகுதியில் அவரது பெண் குழந்தை இறந்து விட்டது.

    உடனே அந்த இடத்தில் இறந்த சிறுமியை அடக்கம் செய்துவிட்டு திரும்பி விட்டனர். சிறுமி அடக்கம் செய்த இடத்தில் அதாவது தற்போது மாரியம்மன் கோவில் முன்பு உள்ள இடத்தில் அப்பகுதி சிறுமிகள் தினமும் விளையாடுவது வழக்கம்.

    கூழ் கேட்ட சிறுமி

    அந்த சிறுமிகளுடன் புதிதாக ஒரு சிறுமி தினமும் விளையாடி விட்டு மாலை நேரத்தில் மறைந்து விடுவாள் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை பற்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகள் ஊருக்குள் சென்று கூறினர். இந்நிலையில் ஒரு நாள், உப்புச்சந்தைக்கு அருகில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்துக்கு அந்த சிறுமி வீடு, வீடாக சென்று பால் கேட்டாள். அவளுக்கு யாரும் பால் கொடுக்க மறுத்து விட்டனர்.

    ஒரு வீட்டிற்கு சென்று சிறுமி கூழ் கேட்டிருக்கிறார். உடனே அந்த வீட்டுப் பெண் சிறுமிக்கு கூழ் கொண்டு வந்து கொடுத்து உள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளாள்.

    தரையில் கொட்டிய பால்

    கூழையும், தண்ணீரையும் குடித்து அந்த சிறுமி அந்த பெண்ணை பார்த்து படுக்க இடம் கொடு என்று கேட்க, வீட்டிற்கு பின்புறம் சென்று படுத்துக்கொள் என்று கூறுகிறார். அந்த சிறுமியும் கொல்லைப்புறத்துக்கு சென்று படுத்துக் கொள்கிறாள். அந்த நேரத்தில் சிறுமிக்கு பால் தர மறுத்த வீடுகளில் பானை உடைந்து பால் தரையில் கொட்டுகிறது.

    அனைவரும் பயந்துபோய், சிறுமிக்கு கூழ் கொடுத்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியை காணவில்லை. அதற்கு மாறாக சிறுமி படுத்திருந்த இடம் புற்றாக மாறியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்தது அம்மன் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் தவறை மன்னிக்குமாறு அம்மனிடம் வேண்டினர்.

    ராஜகோபுரம்

    இதற்கிடையில் திருச்சம்பள்ளியில் ஒரு செல்வந்தரிடம் எனக்கு இருக்க ஒரு கொட்டகை கட்டித்தர வேண்டும் என அசரீரியாக சிறுமி வடிவில் இருந்த அம்மன் கேட்க அதன்படியே திருச்சம்பள்ளியில் கொட்டகை கட்டி தரப்பட்டது.

    முதலில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் சுரங்கத்திற்குள் இருந்தது. நாளடைவில் சிறிய கொட்டகை அமைத்து, சுரங்கத்தில் இருந்து வெளியே அம்மனை கொண்டு வந்தனர். பின்னர் திருப்பணிகள் நடந்து தற்போது 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக மாரியம்மன் கோவில் காட்சி அளிக்கிறது.

    முக்கிய விழாக்கள்

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று பால்குடம், காவடி விழா, ஆடி மற்றும் தை மாதத்தில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை, வைகாசி மாதம் 9 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. மாணவ, மாணவிகள், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வு நாளில் உப்புச் சந்தை மாரியம்மன் மற்றும்(சீதளாபரமேஸ்வரி) சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்ட பிறகே தேர்வு எழுத செல்வர். மேலும் நோய் தீர்க்கும் தலமாக உள்ள இந்த கோவிலில் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நோய்கள் நீங்க வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    நடை திறப்பு

    கோவிலில் நுழைந்த உடன் இடது புறத்தில் விநாயகர், வலது புறத்தில் முருகன் காட்சி அளிக்கிறார்கள். கோவிலுக்குள் பேச்சியம்மன், மதுரை வீரன், கோவிலின் பின் பக்கம் சரஸ்வதி ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இந்த கோவிலில் தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும். இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    பகல் நேரத்தில் நடை திறந்து இருப்பது வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எந்த நேரத்திலும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால் பகல் நேரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் 12 கி.மீ்ட்டர் பயணித்து கீழையூருக்கு சென்று உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலை அடையலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலுக்கு வர விரும்புபவர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • கோதண்டராமர் வில்-அம்பு இன்றி, கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
    • மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது.

    கோதண்டராமர் என்ற திருநாமத்தில், மகாவிஷ்ணு பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பொதுவாக கோதண்டராமர் என்றாலே, வில் அம்போடுதான் காட்சி தருவார். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். இத்தல இறைவனுக்கு 'சதுர்புஜ கோதண்டராமர்' என்று பெயர்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக்காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    தர்மதிஷ்டர் என்ற மகான், ஒரு சமயம் சாபத்தின் காரணமாக தோல் வியாதியால் பாதிப்படைந்தார். அந்த நோய் நீங்குவதற்காக அவர் இத்தலத்து கோதண்டராமரை வழிபட்டார். இதையடுத்து தர்மதிஷ்டரின் நோயை போக்கி அருளினார், கோதண்டராமர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனான கோதண்டராமருக்கு துளசி மாலை அணிவித்து கல்கண்டு படைத்து வேண்டிக்கொண்டால், தோல் வியாதிகள் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து திருமணக் கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் சீதாதேவி சமேத சதுர்புஜ கோதண்டராமரை தரிசித்து வணங்கினால், விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    ராஜகோபுரம் இல்லாமல் காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், விளக்குத் தூண், பலிபீடம், கொடிமரம் முதலானவை காணப்படுகின்றன. அடுத்ததாக வழக்கமான இடத்தில் பெரிய திருவடி, ஒரு சிறு சன்னிதியில் சதுர்புஜ கோதண்டராமரை பார்த்த வண்ணம் வீற்றிருக்கிறார். முன்மண்டபத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறையில் புஷ்பக விமானத்தின் கீழ் சதுர்புஜ கோதண்டராமர் அமர்ந்த திருக்கோலத்தில், இடதுகாலை மடித்து வைத்த நிலையிலும் வலதுகால் திருப்பாதத்தை பூமியை நோக்கி வைத்தவாறும் கிழக்குதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். வலதுபுறத்தில் சீதாதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார். கோதண்டராமருக்கு அருகில் லட்சுமணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறைக்குள் சீதாதேவியை நோக்கி, அனுமன் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.

    பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி என்கிறார்கள்.

    இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம். ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.

    தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்திற்குள், 'சேஷதீர்த்தம்' என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.
    • இந்த கோவிலில் வழிபட்டால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். 'மச்சம்' என்றால் 'மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது. இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில்.

    இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    தல வரலாறு

    ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டினார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான்.

    ஒரு முறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது. அந்த மீன் மன்னனிடம், 'மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்' என்றது. மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது.

    அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான். என்னே அதிசயம்! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான்.

    'பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?' என்றான். அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, 'மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன்.

    அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்' என்று கூறிவிட்டு மறைந்தார். மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.

    • மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர்.
    • நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவில், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டதாகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமூகத்தினர், சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் தேடி நிலக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த சமயத்தில், நிலக்கோட்டை பகுதியில் வசித்த மக்கள் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நாடார் சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள், இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நிலக்கோட்டையில் மிக சிறிய அளவில் மாரியம்மனுக்கு கோவிலை கட்டினர். கோவிலின் அருகே தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து, பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். இதன் எதிரொலியாக, நிலக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட நோய் தாக்குதல்கள் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால் தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நாடார் சமூகத்தினர் நம்பினர். அதன்பிறகு கடந்த 1912-ம் ஆண்டில், இந்த கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும், நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் கூடிய பல்வேறு வேலைபாடுகளுடன் திருப்பணிகள் நடத்தி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து, மிக பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், பைரவர், லிங்கோத்துபவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வேண்டி வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தெய்வமாக மாரியம்மன் வீற்றிருக்கிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    வாழைப்பழம் சூறையிட்டு வழிபாடு

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல் வாழைப்பழ சூறையிடும் நிகழ்ச்சி திருவிழாவில் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

    மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர். இதற்காக கோவில் முன்பு வாழைப்பழங்களை குவியலாக வைத்து, சூறையிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த வேண்டுதல் நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கரும்புத்தொட்டில் சுமக்கும் தம்பதிகள்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அவர்களது கோரிக்கையை அம்மன் நிறைவேற்றுவார். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதிகள் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதன் மூலம் கரும்புகளில் தொட்டில் கட்டுவார்கள். குழந்தையை அதில் படுக்க வைத்து நிலக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து, பின்பு கோவிலை 3 முறை சுற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    அதன் பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் விழாவில் கரும்பு தொட்டில்களில் நேர்த்தி கடன் செலுத்தும் தம்பதிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருக்கிறது.

    நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது. பல்வேறு நோய்களும் தீர்ந்து வருகிறது. கோடைக்காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் பல்வேறு கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்கள் தீர அம்மனை மனதார வேண்டி கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிலில் வழங்கப்படுகிற தீர்த்தத்தை 3 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதேபோல் பிற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இக்கோவிலின் தீர்த்தம் உள்ளது.

    • தல விருட்சமாக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மரம் உள்ளது.
    • உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து, அந்த நட்சத்திரம் முடியும்போது பூக்கள் வாடி விழுகிறது.

    பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ கோவிலில் வழிபடுவது சிறப்புக்குரியது. பல்வேறு ஊர்களில் வசிப்பவர்களும் குலதெய்வ கோவிலில் ஒன்றுகூடி வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது. காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம், இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

    பெயரில் பூவின் மென்மை இருந்தாலும், கோவிலின் வரலாறு, சிறு அச்சத்துடன் பயபக்தியை மேலிடச் செய்வதாகவே இருக்கிறது. பழங்காலத்தில் தெற்கு கருங்குளத்தில் செல்வாக்குமிக்க பக்தர் ஒருவர் வசித்தார். அவர், பூ சாஸ்தா கோவில் அருகில் இருந்த பாறாங்கல்லில் ஒரு செக்கை செய்து வீட்டிற்கு எடுத்து வர முயன்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அந்த கல் செக்கு நகராததால், அவர் குழப்பமடைந்தார்.

    அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்தது. அப்போது அவர், 'பங்குனி உத்திரத்தில் நான் கேட்கும் படையலிட்டால் செக்கு நகரும்' என அந்த பக்தரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அவரும் கோவிலில் சத்தியம் செய்து கொடுக்க செக்கு நகர்ந்தது.

    நரபலி கேட்ட சாஸ்தா

    அதன்பிறகு பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்ற பக்தர், சாஸ்தாவிடம் 'என்ன படையல் வேண்டும்?' என்று கேட்க, அப்போது அருள் வந்து சாமியாடியவர் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

    'எனக்கு படையலாக நரபலி தர வேண்டும்' என பூ சாஸ்தா கேட்க, சத்தியம் செய்து கொடுத்த பக்தர் செய்வதறியாது திகைத்தார். வேறு வழியின்றி தனது வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை, அவர் நரபலி கொடுத்தார்.

    இனி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்தரத்தன்று அந்த பக்தர் நரபலி கொடுப்பார் என அஞ்சிய ஊர் மக்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பூ சாஸ்தா கோவில் நாளடைவில் பூஜையின்றி களையிழந்தது. இதற்கிடையே வேறு ஊர்களுக்கு சென்ற மக்களும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண நினைத்த அந்த ஊர் மக்கள் அனைவரும், மீண்டும் பூ சாஸ்தா கோவிலில் கூடி நின்று கண்ணீர்மல்க வணங்கி வழிபட்டனர். அப்போது 'நரபலிக்கு பதிலாக ஒரு கோட்டை நெல் குத்தி கொழுக்கட்டையாக செய்து பங்குனி உத்திரத்தில் படையலிட்டால் உங்கள் கஷ்டம் தீரும்' என அருள்வாக்கு தந்தார் பூ சாஸ்தா.

    அன்று தொடங்கி இன்று வரை பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலில் மெகா கொழுக்கட்டை படையல் தொடர்கிறது. இதற்கான நெல்லையும் அந்த பக்தர் வீட்டில் இருந்தே பரம்பரை பரம்பரையாக கொடுக்கின்றனர்.

    பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கோவிலில் உள்ள பூ சாஸ்தா, சங்கிலிபூதத்தார், ஆலிபப்பம்பரத்தி, வன்னியராஜா, பொற்கலை புஷ்கலா, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடக்கிறது. 15 நாட்கள் விரதம் இருந்த 50 ஆண்கள் ஒன்று சேர்ந்து, அந்த பக்தர் வீட்டில் இருந்து ஒரு கோட்டை நெல் வாங்கி வந்து, அதனை அன்றே குத்தி அந்த அரிசியை இடித்து மாவாக்குகின்றனர்.

    பின்னர் மாவில் நீர்விட்டு பிசைந்து உருட்டி தட்டுகின்றனர். தொடர்ந்து காட்டுச் செடிகளின் இலைதழை கொடிகளை ஒன்றாக கட்டி பரப்பி, அதன் மீது இலைகளை பரப்பி, அதில் உருட்டி தட்டிய மாவை அடுக்குகின்றனர். அந்த மாவின் மீது சிறுபயறு, தேங்காய் துருவல் கலந்து பூரணத்தை வைக்கின்றனர். இவ்வாறு மாவையும், பூரணத்தையும் மாறி மாறி அடுக்கிய பின்னர் அவற்றை இலைகளால் மூடி மெகா கொழுக்கட்டை தயாரிக்கின்றனர்.

    தொடர்ந்து பூஜை முடித்து வரும் சாமியாடி மெகா கொழுக்கட்டையை தூக்கிச் சென்று, அன்று வெட்டிய உடைமர விறகினால் ஏற்படுத்தப்பட்ட தணலில் போடுகிறார். சுமார் 7 மணி நேரம் தணலில் கொழுக்கட்டை வெந்தவுடன், அதனை பூ சாஸ்தாவுக்கு படைத்து வழிபட்ட பின்னர் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

    அதிசய மரம்

    பூ சாஸ்தா கோவிலில் தல விருட்சமாக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மரம் உள்ளது. அந்த மரத்தின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த அதிசய மரமானது ஆண்டில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் ஒரே ஒரு பூக்களை தோற்றுவிக்கிறது. அந்தப் பூக்களும் அன்றைய தினமே உதிர்ந்து விடுகிறது.

    சில ஆண்டுகளில் இருமுறை பங்குனி உத்திரம் வரும்போது, இரவில் உத்திர நட்சத்திரம் வரும்போது மட்டுமே அதிசய மரம் பூக்கின்றது. உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து, அந்த நட்சத்திரம் முடியும்போது பூக்கள் வாடி விழுகிறது.

    -புலவனூரான்

    • இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.
    • இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது.

    கிராமப்புறங்களில் இருக்கும் கோவில்களில் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கும். அதிலும் சின்னஞ்சிறு கோவில்களில் இருக்கும் சிறப்பம்சங்களை பார்க்கும் போது, அவற்றில் சில வியப்பை அளிக்கலாம். கிராம தெய்வங்கள், கிராம காவல் தெய்வங்கள் என்று மக்கள் பல்வேறு விதமாக சிறு தெய்வங்களை கொண்டாடி வருகிறார்கள். அப்படியொரு சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், கடலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலம்பிமங்கலத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன் திருக்கோவில்.

    சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. முன்னதாக நம்மை வரவேற்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு வளைவு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளைவிலும் சிலம்பியம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    கோவிலுக்குள் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உள்பட 7 அம்மன்களை நாம் தரிசிக்கலாம். அதைக் கடந்து சென்றால், திரிசூலம், பலிபீடம், அம்மனின் வாகனமான சிம்மம் ஆகியவை உள்ளன. கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள்.

    தல வரலாறு

    இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. அதனால் இது மிகவும் தொன்மையான ஆலயம் என்பது புலனாகிறது. ஒரு முறை தில்லை எனப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும், தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள், 16 கரங்களைக் கொண்ட தில்லைக்காளி அம்மன். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று சீறிப்பாய்ந்து ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.

    நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும், இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன.

    மேலும் சிலம்பியம்மனுக்கு கோவில் அமைக்க அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே, ஆலயத்தை நிறுவலாம் என்று நினைத்தனர். அதற்காக பள்ளம் தோண்டியபோது, விநாயகர், நந்தி, ஆஞ்சநேயர், அங்காளம்மன், எருமை வாகனத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, மணிமேகலை, பாவாடைராயன், நாககாளி, கருமாரியம்மன், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோரது திருவுருவச் சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டதை கண்டு மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதன்பின்னர் இங்கு அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இங்குள்ள மக்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, இப்பகுதி மக்கள் அனைவரும் இத்தல அன்னையிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். அம்மனும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்றளவும் அமோகமான விளைச்சலை தந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், இப்பகுதி விவசாயிகள் முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.

    இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன், தில்லை காளியின் மறு வடிவமாகவே இந்தப் பகுதி மக்களால் பார்க்கப் படுகிறார். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும், தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எந்த தெய்வச் சிலைகளும், வெளியில் இருந்து கொண்டுவரப்படவில்லை என்பதே இந்த புண்ணிய பூமியின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக அமைந்திருக்கிறது.

    ஊர் கட்டுப்பாடு

    வைகாசி மாதம் 1-ந் தேதி முதல் பத்து நாள் உற்சவம் இக்கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வு தொடங்கி 10-ம் நாள் காப்பு களையும் வரை, இந்த ஊரில் வசிக்கும் யாரும் வெளியூர் செல்லக்கூடாது. வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், காப்பு கட்டும் நிகழ்வுக்கு முன்பாக ஊருக்குள் வந்துவிட வேண்டும் என்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது. இதை யாரும் மீறுவதில்லை என்கிறார்கள். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும், சிலம்பியம்மன் மட்டுமே உற்சவராக ஊருக்குள் வீதி உலா வருவார். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறியதற்காக இங்கு பலவிதமான நேர்த்திக் கடனை செய்கிறார்கள்.

    இது தவிர ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். அங்கிருந்து கோவில் இருக்கும் மணல் திட்டுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

    -பொ.பாலாஜிகணேஷ்,

    சிதம்பரம்.

    • வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.
    • புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சவுரிராஜ பெருமாளை நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்களாலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களாலும், ஆண்டாள் 1 பாசுரத்தாலும், பெரியாழ்வார் 1 பாசுரத்தாலும் பாடி உள்ளனர்.

    கடுமையான பஞ்சம்

    முனையதரையர் என்பவர் சோழ மன்னனின் அபிமானம் பெற்று மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜ பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து பெருமாளுக்கு சேவைகள் செய்து வந்தார். அவர் மீது ஒரு பெண், பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள்.

    ஒரு வருடம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் முனையதரையர், தாம் சேகரித்த கப்பம் முழுவதையும் கோவிலில் திருவாராதனத்துக்கும், அடியாருக்கு அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார்.

    பெண்ணை காப்பாற்றினாா்

    இதனால் சினம் கொண்ட சோழ மன்னன், முனையதரையரை சிறையில் அடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனையதரையர் மீது பேரன்பு கொண்ட பெண், சவுரிராஜபெருமாளை மனமுருகி வேண்டினாள். அப்போது அவள், 5 நாட்களுக்குள் சிறையில் இருந்து முனையதரையர் விடுவிக்கப்படாவிட்டால் நெருப்பில் பாய்ந்து உயிர் துறப்பதாக சபதம் செய்தாள்.

    இதனால் மன்னர் கனவில் தோன்றிய சவுரிராஜபெருமாள், முனையதரையரை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட முனையதரையர், திருக்கண்ணபுரத்துக்கு சென்று தீயில் பாய்ந்து உயிர்விட தயாராக இருந்த பெண்ணை காப்பாற்றினார்.

    கருமையான முடி

    சவுரிராஜன் தலையில் சவுரி அணிந்திருப்பார். ஒருநாள் பெருமாளை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர், தான் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதை மன்னனுக்கு அளித்தார். அந்த புஷ்பத்தில் கருப்பான முடி இருந்ததை கண்ட மன்னன், அர்ச்சகரை கடிந்தான்.

    அப்போது அர்ச்சகர், பெருமாளுக்கு எப்போதும் தலையில் கருமையான முடி இருக்கும் என கூறினாா். இதனால் கோபம் கொண்ட மன்னன், மறுநாள் காலை வரும்போது பெருமாளுக்கு முடி இருப்பதை காட்ட வேண்டும் என கூறி சென்றார். இதனால் அர்ச்சகரை சோழ மன்னனின் தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள், கருமையான முடியுடன் காட்சியளித்தார்.

    ஆஞ்சநேயர் சன்னதி

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது.

    தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவரை வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழா

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகோற்சவ விழா மாசி மாதம் பவுர்ணமி திதி 9-ம் நாள் சமுத்திரத்தில் தீர்த்த வாரியுடன் நடைபெறுகிறது. தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை வழிபாடும் சிறப்பாக நடக்கும். வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    சனிபகவான்

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே சனிபகவானின் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை மூடப்படும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் மேல் பெருமாளின் பார்வை படுவதால் இந்த கோவிலில் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நீ்ங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்வது எப்படி

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    ×