search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்
    X

    இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்

    • இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
    • இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.

    சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

    கொல்லி மலை, கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.

    அறப்பளீஸ்வரர் கோவிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

    கொல்லிப்பாவை கோவில்

    தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோவில் உள்ளது.

    சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.

    கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி" எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் "அறப்பள்ளி ஈஸ்வரன்" என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மேலும் 'அறை' என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் "அறைப்பள்ளீஸ்வரர்" என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.

    இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அறம் வளர்த்த இறைவி பள்ளிகொண்ட தலம் என்பதால் புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்றழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம்

    உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.

    ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில் வல்வில் ஓரி சிவாலயம் நிர்மாணித்தான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.

    Next Story
    ×