search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திரசேகரர் திருக்கோவில்
    X

    பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திரசேகரர் திருக்கோவில்

    • இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும்.
    • 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.

    திருமண வரம் தரும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவில் உள்ளது.

    கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும் திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியம் அருளும் பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திர சேகரர் கோவில் முக்கிய பரிகார தலம் ஆகும்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் மேல்பாகம் கோட்டைத் தெருவில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி(சிவன்) கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். ராஜராஜ சோழன் சோழ நாட்டுக்கு சோழமண்டலம் எனப் பெயர் மாற்றம் செய்து அதை 13 வள நாடுகளாக பிரித்தார். அதில் ஒன்றான பரண்டையூர் நாட்டில் இருந்த செல்லூர் என்ற ஊர் தான் இன்றைய பட்டுக்கோட்டையாகும்.

    குபேரன் சிலை

    அக்காலத்தில் மராட்டிய படை தளபதி பாவாஜி பண்டிதர் என்பவர் பட்டுக்கோட்டையில் கோட்டை கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. பட்டுக்கோட்டை சந்திரசேகர சாமி கோவில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றழி கோவிலாகும். இக்கோவிலின் 3 அடுக்கு கோபுரத்தை கடந்து ஆலயத்தின் இடது புறம் பங்குனித் திருவிழா முடிந்து பாதுகாப்பாக நாடியம்மன், அய்யனார் உற்சவர் சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ளன. இடது புற பிரகாரத்தில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன.

    இக்கோவிலில் உள்ள இறைவன் பெயர் பிறைசூடும் தம்பிரானார். பிற்காலத்தில் அதுவே வடமொழி ஆக்கமாக சந்திரசேகரர் என்று சூட்டப்பட்டது. அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. அம்பாள் தெற்கு பார்த்த நிலையில் தனி சன்னதியில் நின்றகோலத்தில் உள்ளார். மூலவர் தரிசனம் செய்து வெளியே வந்தால் இடதுபுற சுவரில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது.

    பவுர்ணமி பூஜை

    கர்ப்பகிரகத்தின் மூன்று புற கோஷ்டங்களிலும் மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் சிலைகள் உள்ளன. வலது பிரகாரத்தில் சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் சிலைகள் உள்ளன. கருங்கற்களால் முழுவதும் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகளை தாங்கி வரலாறு கூறி நிற்கும் சிறப்பு பெற்றது.

    இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும். இவற்றில் கலந்து கொள்வதால் நிறைந்த செல்வம், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு, திருவருள் துணை போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சந்திரசேகர சுவாமி கோவிலில் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி-தெய்வானையுடனும் உள்ளனர். சோழர் காலத்தில் பெரும் போற்றுதலுக்குரிய ஜேஷ்டா தேவியின் சிலை அபூர்வமாக இங்கு உள்ளது. சிலை சிறியதாக இருந்தாலும் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இருபுறமும் காளை முகமும், குதிரை முகமும் உடைய மாந்தி, குளிகன் என்ற இரு மக்களுடன் உள்ளார்.

    32 தூண்கள்

    இக்கோவில் திருமஞ்சன மண்டபம் 32 தூண்களை கொண்டது. தரை கருங்கற்களால் பரப்பப்பட்டது. தரைக்கல்லில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் சோழர் காலத்தில் இவ்வூர் தலைவனாக இருந்தவர் ராஜேந்திர சுந்தர தோளுடையான் என்பவர். இவர் காலத்தில் ஒரு நிலம் குறித்த வழக்கு வருகிறது. மன்னரிடம் ஒருவர் நில உரிமை கேட்க நில உரிமைக்கான ஓலையை காட்ட வேண்டும் என்று மன்னர் ஆணை இடுகிறார்.

    நில உரிமை கேட்டவரும் மன்னர் கேட்டபடியே நிலத்துக்கான உரிமை ஓலையைக்காட்ட நிலம் கேட்டவருக்கே என்று தீர்ப்பு கூறப்படுகிறது. இந்த தகவல் கோவில் கல்வெட்டில் உள்ளது. நில உரிமைக்கு அக்காலத்திலேயே உரிமை ஓலை(பத்திரம்) இருந்தது நன்கு விளங்குகிறது.

    1200 ஆண்டுகளுக்கு முன்பு...

    அன்னிய படையெடுப்பின்போது பட்டுக்கோட்டையில் இருந்த கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. கோவிலும் தாக்கப்பட்டு சேதம் அடைந்தது. கோட்டை இருந்த இடம் இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் சந்திரசேகர சுவாமி கோவில் நாயக்க மன்னர் காலத்திலும், மராட்டியர் ஆட்சியிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தால் சிறிது தூரத்தில் கிணறு உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவாி மாதம் 10-ந் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். திருமணத்தடை நீக்கும் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    கோவிலுக்்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் பட்டுக்கோட்டைக்கு வர வேண்டும். பின்னர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சாமியார்மடம் பகுதிக்கு செல்லும் பஸ்சில் ஏறி சாமியார்மடத்தில் இறங்கி அங்கிருந்து ½ கி.மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலை அடையலாம். இதேபோல் பஸ் மூலம் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாமியார்மடம் செல்லும் பஸ்சில் ஏறி கோவிலை அடையலாம்.

    Next Story
    ×