என் மலர்
வழிபாடு
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்
- பக்தர்கள் ராஜகோபாலசாமி மீது வெண்ணெய்யை வீசி வழிபட்டனர்.
- இன்று தேரோட்டம் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த தலம் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாளுக்கு ஆண்டுதோறும் உற்சவம் நடப்பது சிறப்பு அம்சமாகும். அதில் ஒரு மாதம் நடக்கும் பங்குனி பிரமோற்சவம் எனப்படும் பங்குனி பெருவிழா மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விழாவாகும்.
பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து நவநீத கோலத்தில் வெண்ணெய் உண்ணும் பாலகனாக பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டார். கோபால சமுத்திரம் கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி என கோவிலின் நான்கு வீதிகளையும் வலம்வந்து பின்னர் கடைத்தெரு வழியாக பந்தலடி வந்தடைந்தார். பின்னர் வெண்ணெய்த்தாழி மண்டபத்திற்கு வந்து நிறைவடைந்தது.
இதில் ராஜகோபாலசாமி வீதி உலா வந்த வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபாலன் மீது வெண்ணெய்யை வீசி வழிபட்டனர். விழாவில் மன்னார்குடி மட்டும் இன்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் மன்னார்குடி நகரம் திருவிழா கோலம் பூண்டது.. மேலும் அனைத்து தெருக்களிலும் வர்த்தக நிறுவனத்தினர், பொது நல சங்கத்தினர் நீர் மோர் பந்தல்கள் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர்.
தொடர்ந்து இரவு ராஜகோபாலசாமி வெட்டும் குதிரை பல்லக்கில் முன்னோட்டம் பின்னோட்டமாக 3 முறை தெருவில் வீதிஉலா வந்து விழா நிறைவடைந்தது.
இரவு நவீன வாண வேடிக்கைகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபாலனை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.