search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்
    X

    தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்

    • 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர்.
    • தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுகிறது.

    ஹெபடைட்டிஸ் பி வைரசால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக அளவில் சுமார் 30 கோடி பேர் ஹெபடைட்டிஸ் பி வைரசால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருடம்தோறும் 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர். ஹெச்ஐவி வைரசை போலவே ஹெபடைட்டிஸ் பி வைரசும் ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியை பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்குத் தொற்று என பிறருக்குப் பரவுகிறது. எனினும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் பி தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருந்தால், குழந்தைக்கு பெரும்பாலும் பிரசவத்தின்போது நிகழும் தாய்-சேய் ரத்தக் கசிவினால், தாயின் ரத்தத்துடன் தொடர்பு ஏற்பட்டு, குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படுகிறது. தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று, கர்ப்பகாலத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு 10 சதவிகிதம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    மாறாக, கர்ப்ப காலத்தின் இறுதி 3 மாதங்களிலோ, பிரசவ காலத்துக்கு மிக அருகிலோ ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்குத் தொற்று ஏற்பட 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

    எனவேதான், கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனை பாசிடிவ் எனில், தாய்க்கு கல்லீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் 28 -30-வது வார கர்ப்பகாலத்தில் ஹெபடைட்டிஸ் பி எவ்வளவு உள்ளது போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். வைரஸ் லோடு மிக அதிகமாக இருப்பின் தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிராக சிகிச்சைத் தொடங்கப்படும்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் உடனடியாக ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோ குளோபுலின் ஊசியும் போட வேண்டும்.

    குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று பெரும்பாலும் பிரசவத்தின் போது நிகழும் தாய் - சேய் ரத்தக் கசிவின் போதுதான் ஏற்படுகிறது என்பதாலும், கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி வழியாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று 4 சதவிகிதத்துக்கு கீழாகவே ஏற்படுகிறதென்பதால், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் பிறந்தவுடன் உடனடியாக போடப்பட்டு விட்டால், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்றை 95 சதவிகிதத்துக்குக் குறைத்துவிடலாம்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலினில் ஹெபடைட்டிஸ் பி வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளதால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் போடப்பட்டுவிட்டால், தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்கு பிரசவ நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி கிருமி சென்றிருந்தால்கூட, அதை அழித்துவிடும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியை முடிந்தவரை பிறந்த 12 மணி நேரத்துக்குள்ளும், அதிகபட்சமாக 48 - 72 மணி நேரத்துக்குள்ளும் கட்டாயமாகப் போட வேண்டும்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியின் விலை ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படுகிறது.

    Next Story
    ×