என் மலர்
உடற்பயிற்சி
எப்பொழுது நாடி சுத்தி பிராணாயாமம் செய்யக்கூடாது...
- மன அழுத்தத்தை போக்கி மன அமைதியை ஏற்படுத்துகிறது.
- நுரையீரலை பலப்படுத்தி சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
பலன்கள்
உடம்பில் ஓடும் நாடிகள் அனைத்தையும் சுத்திகரித்து சமநிலைப்படுத்துகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
உடலில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. வலது மற்றும் இடது மூளையின் சமநிலையை வளர்க்கிறது. இருதய நலத்தை பாதுகாக்கிறது.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மன அழுத்தத்தை போக்கி மன அமைதியை ஏற்படுத்துகிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
செய்முறை
பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனத்தில் (வஜ்ராசனம் பற்றி வரவிருக்கும் நாட்களில் பார்க்கலாம்) அமரவும். முதுகுத்தண்டை நேராக வைக்கவும். இடது கையை சின் முத்திரையில் வைக்கவும். மூச்சை முழுவதும் வெளியே விடவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை பூட்டுங்கள் (அடையுங்கள்).
இடது நாசி வழியே மூச்சை முடிந்த வரை உள் இழுக்கவும். இப்போது, இடது நாசியை, வலது கை மோதிர விரலால் பூட்டி, வலது நாசி வழியே மூச்சை மெதுவாக வெளியே விடவும். பின் வலது நாசி வழியே (மூச்சை வெளியே விட்ட வழியே) மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது வலது நாசியை அடைத்து இடது நாசி வழியே மூச்சை வெளியேற்றவும்.
இவ்வாறு, வலது நாசி பூட்டி இடது நாசி வழியே இழுத்து, இடது நாசியை பூட்டி வலது வழியே வெளியேற்றி, பின் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுத்து, பின் வலது நாசியை பூட்டி இடது நாசி வழியே வெளியேற்றினால் ஒரு சுற்று ஆகும். இது போல் 5, 9, 11, 15 சுற்றுகள் செய்யலாம்.
ஆசனத்தில் அமர்ந்து செய்ய இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து செய்யலாம். கவனிக்கவும், இது தரையில், கூறப்பட்டுள்ள ஆசனங்களில் ஒன்றில் அமர முடியாதவர்களுக்கு மட்டுமே.
தீவிர தலைவலி, சுரம், கடுமையான சோர்வு ஏற்படும் நேரங்களில் நாடி சுத்தி செய்வதை தவிர்க்க வேண்டும்.