search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • பெங்களூரில் உள்ள அபார்ட்மெட் ஒன்றில் நடந்த சம்பவம் பலரின் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
    • கோலத்தை அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அபார்ட்மெண்ட் வீட்டில் குடியிருப்பது சில நேரங்களில் உதவியாகவும் சில நேரங்களில் உபத்திரவமாகவும் இருப்பது வழக்கம். அந்த வகையில் பெங்களூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் நடந்த சம்பவம் பலரின் கண்டனங்களைக் குவித்து வருகிறது. கேரளாவில் பிரதானமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழகம் உட்படத் தென் இந்திய மாநிலங்களிலும் சமீபகாலமாக அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மெண்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பங்கள் ஒன்றிணைத்து ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒரு பகுதியாக அபார்ட்மெண்ட் பொது தளத்தில் உள்ள பகுதியில் சிறுவர் சிறுமிகள் ஒன்றிணைத்து வரைந்த பூக்கோலத்தை அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் காலால் அளித்துள்ளார். கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே, பொது இடத்தில் ஏன் போட வேண்டும் என்று கேட்டு அவர் கோலத்தை அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • லோக்அயுக்தா போலீசார் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.
    • சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    மேலும் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. முதல் நாளிலேயே, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.

    அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


    இந்த நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு அளிக்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில் மூடா முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உத்தரவு விடப்பட்டுள்ளது.

    அதன்படி லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.

    விசாரணை நடத்தி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் நிலை ஏற்படும். அதே நேரத்தில் சித்தராமையா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.

    • குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (24) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் ததேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நெலமங்களா பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடல் பாகங்களை 50 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குறிப்பிட்ட சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்,

    மேலும் மகாலட்சுமியை தினமும் அவருடன் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வாலிபர் யார்? என்று விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் எண்ணை கைப்பற்றினர். மேலும் 4 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    அப்போது அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. எனவே காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும் போது, பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதேபோல் போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:-

    கொலை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். மகாலட்சுமியை கொலை செய்த பிறகு இறைச்சி வெட்டுவது போல் வெட்டி உள்ளார். பின்னர் அவரது உடல் உறுப்புகளை ஒரு சூட்கேசில் ஏற்றிச் செல்ல கொலையாளி முயற்சி செய்து உள்ளார்.

    ஆனால் இது முடியாததால் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். மகாலட்சுமி உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை தேடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

    • சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நிமிடத்திலேயே நிரஞ்சன் பரிதாபமாக இறந்து விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு மல்லேசுவரம் அருகே உள்ள பைப்லைன் ரோட்டில் வசித்து வருபவர் விஜய்குமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு நிரஞ்சன் (11) என்ற மகன் உள்ளார். இவர் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் நிரஞ்சன் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றான்.

    மாலை 4 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நிரஞ்சன் சென்றபோது மைதானத்தின் முன்பக்க கதவு பூட்டி கிடந்தது. உடனே அந்த கதவை நிரஞ்சன் திறக்க முயன்றதாக தெரிகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த இரும்பு கதவு சரிந்து நிரஞ்சன் மீது விழுந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிரஞ்சனை உடனடியாக அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நிமிடத்திலேயே நிரஞ்சன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
    • டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை, மத்திய மந்திரி குமாரசாமி, பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜோலே, ஜனார்த்தன ரெட்டி உள்பட 4 பேர் மீதான முறைகேடு வழக்கு விசாரணைக்கு லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்குமாறு கவர்னரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

    மேலும் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்தும் குமாரசாமி உள்பட 4 பேர் மீதான முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்க வலியுறுத்தினர்.

    இதனால் கோபம் அடைந்த கவர்னர், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர லோக்அயுக்தா அனுமதி கேட்டுள்ள விவரங்கள் பற்றி அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர், தன்னிடம் உள்ள வழக்குகளுக்கு லோக்அயுக்தா அனுமதி கோரிய விஷயம் அரசுக்கு எப்படி தெரியும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில், பெங்களூருவில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள அர்க்காவதி லே-அவுட் நில முறைகேடு தொடர்பாக 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கெம்பண்ணா ஆணையத்தின் அறிக்கையின் நகலை வழங்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் சமயத்தில் முதல்-மந்திரியாக சித்தராமையா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவர்னர் அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களுக்கு அறிக்கை வழங்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. கவர்னர் அனுப்பும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மந்திரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கெலாட்டை திரும்ப அழைக்குமாறு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து கர்நாடக அரசு, கவர்னர் இடையேயான மோதல் விவகாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • வாலிபர்கள்4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • வழக்கை விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    நேபாளத்தை சேர்ந்தவர் சரண்சிங் ராணா இவரது மனைவி மீனா. இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நெலமங்களா பகுதிக்கு குடிவந்தனர். இவர்களுக்கு லட்சுமி, மகாலட்சுமி என்ற 2 மகள்களும் உக்கிம்சிங், நரேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    2-வது மகளான மகாலட்சுமிக்கும் ஹேமந்த்தாஸ் (32) என்பருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை விட்டு பிரிந்து பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    மேலும் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்றார்.

    கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவரை தாய் மற்றும் குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.

    இதையடுத்து மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் சகோதரர் உக்கிம்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து. வேறு சாவி மூலம் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடல்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 30 துண்டுகளாக வெட்டி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் தனியாக தனியாக பிரித்து வைக்கப்பட்டது. மேலும் மகாலட்சுமியின் தலையை 3 பகுதிகளாக வெட்டியிருப்பதும், கால்கள் துண்டிக்கப்பட்டு குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இந்த பிரேதப் பரிசோதனை நீடித்தது.

    வழக்கமாக பிரேதப் பரிசோதனை செய்யும் போது ஒருவரின் உடல் முழுமையாக இருக்கும் ஆனால் மகாலட்சுமியின் உடல்பாகங்கள் சிறு, சிறு பாகங்களாக இருந்தது. இதனால் முதலில் அவரது உடல்பாகங்களை வரிசை எண்போட்டு டாக்டர்கள் ஒன்றாக சேர்த்தனர்.

    அதில் ஏதேனும் பாகங்கள் விடுபட்டுள்ளதா? என்றும் அதன் பிறகு உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா? என்றும் பார்க்கப்பட்டது.

    மகாலட்சுமியின் உடலை கூறுபோடுவதற்கு முன்னதாக அவர் எப்படி கொலை செய்யப்பட்டார். என்பதை அறிய உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்பட்டது.

    மேலும் கொலையானது மகாலட்சுமி தான் என்பதை அடையாளம் காண உடல் பாகங்கள் தனியாக தனியாக டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் உடல் பாகங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்தது சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

    மேலும் கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

    டாக்டர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    பிரதேப் பரிசோதனை முடிந்து. மகாலட்சமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க்பபட்டது.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர கொலை வழக்கை விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக மகாலட்சுமி வேலை பார்த்து வந்த மாலில் பணியாற்றும் உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

    எனவே அவர்கள் பிடிப்பட்டால் தான். முழு விவரமும் வெளியாகும். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மகாலட்சுமி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர் பயன்படுத்திய 4 சிம்கார்டுகளும் மகாலட்சுமி வசித்த வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு காமிராக்களில் சில முக்கிய காட்சிகள் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு.
    • வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த் தாஸ் இவருக்கும் மகாலட்சுமி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து மகாலட்சுமி பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இவர் இங்கிருந்து பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போனுக்கு உறவினர்கள், நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி நெலமங்காலவில் இருந்து மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு நேற்று வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து அவர்கள் பக்கத்து வீட்டினரிடம் கேட்டபோது மகாலட்சுமி நடமாட்டம் வெளியே இல்லை என்றும். அவரது விட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து மகாலட்சுமியின் சகோதரி வயாலிகாவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் மகாலட்சுமியை போலீசார் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உடல் பாகங்ககளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்று வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் யார்? என்றும் அவரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த மகாலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை தினமும் ஆண் நண்பர் ஒருவர் வேலைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வெளியே வரவில்லை. மேலும் அந்த நபரும் காணவில்லை எனவே காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன விவகாரம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அவர் யாரிடம் பேசினார். எவ்வளவு நேரம் பேசினார். அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பேசியது யார்? என்றும் விசாரணை நடக்கிறது.

    மேலும் மகாலட்சுமி வீட்டிற்கு வந்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாலட்சுமியை கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் உடல் பாகங்கள் அழுகி புழு வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ரெப்ரிஜிரேட்டரில் மனித உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது
    • அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் தெரிவித்தனர்

    பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய நிலையில் வீட்டில் ஆன் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த 165 லிட்டர் சிங்கிள் டோர் ரெப்ரிஜிரேட்டரில் மனித உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது. அது அந்த 1 பிஹெச்கே வீட்டில் வசித்து வந்த 29 வயது பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது. அந்த  பெண் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் பெங்களூரில் வீடு எடுத்து மால் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள் பாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்துக்கு (FSL) சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு தூண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தசரா பண்டிகையோட்டி மைசூர் அரண்மனைக்கு 2 யானைகள் கொண்டு வரப்பட்டன.
    • தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது.

    கர்நாடகாவில் உள்ள மைசூர் அரண்மனையில் 2 யானைகள் சண்டையிட்டு கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த மாதம் இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தசரா பண்டிகையோட்டி மைசூர் அரண்மனைக்கு தனஞ்சயா , கஞ்சன் என்ற 2 தசரா யானைகள் கொண்டு வரப்பட்டன

    நேற்று இரவு தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது. 2 யானைகளும் மைசூர் அரண்மனை வளாகத்தை சுற்றி வந்து சாலைக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • கழிவறை முன்பு சக மாணவ, மாணவிகள் திரண்டனர்.
    • மாணவி கழிவறையில் தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.

    பெங்களூரு;

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் தொட்டபெலே சாலையில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்த மாணவர் குஷால் என்பவர் மாணவிகள் கழிவறைக்கு சென்று அங்குள்ள ஒரு அறையில் பதுங்கி கொண்டார்.

    பின்னர் கழிவறைக்கு வந்த மாணவிகளை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அப்போது கழிவறைக்கு வந்த ஒரு மாணவி தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுக் கொண்டே கழிவறையை விட்டு வெளியே ஓடிவந்தார்.

    இதையடுத்து கழிவறை முன்பு சக மாணவ, மாணவிகள் திரண்டனர். மேலும் கல்லூரி ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி கழிவறையில் தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். உடனடியாக மாணவர்கள் சிலர் கழிவறைக்குள் சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு கழிவறையில் பதுங்கி இருந்த மாணவர் குஷாலை வெளியே இழுத்து வந்து தாக்கினர். மேலும் வீடியோ எடுத்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர் குஷாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காலை 10 மணி முதல் 10.45 வரை அவர் 2 மாணவிகளை வீடியோ எடுத்து இருந்தது பதிவாகி இருந்தது. அதில் ஒரு வீடியோ 14 நிமிடங்கள், மற்றொரு வீடியோ 59 வினாடிகள் இருந்தது. மேலும் கைதான மாணவர் இதேபோல் இதற்கு முன்பு வீடியோக்களை எடுத்து உள்ளாரா? மேலும் அந்த வீடியோவை வேறு யாரிடமாவது பகிர்ந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் உத்தரவு.
    • திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது.

    கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது. 8 மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது.

    • வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது அந்த சுங்கச்சாவடி. அந்த வழியாக சென்ற கர்நாடகாவை சேர்ந்த ஒரு டிரைவரின் வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி கட்டணம் வசூலித்தனர்.

    அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்தியில் பேசி உள்ளனர். இதற்கு கர்நாடக டிரைவர் எதிர்ப்பு தெரிவித்தார். 'நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை?' என்று கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர், தனது செல்போனை எடுத்து வீடியோவாக பதிவு செய்து கொண்டே டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். 'இந்தியா முழுவதும் இந்தி பேசப்படுகிறது' என்று வாதம் செய்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் மேலும் வளர்ந்தது.

    இதுபற்றிய வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது. விவாத முடிவில் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியரின் கன்னத்தில் அறைந்ததாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×