search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • இந்தோனேசியாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடந்தது.
    • உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

    இந்தோனேசியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார். இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-

    * அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசா'வை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

    * இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவுப்பரிசு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.

    * ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா.

    * இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு, 'படன் படோலா' துப்பட்டா ஆகும்.

    * பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவுப்பரிசாக தந்தது, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான 'அகேட்' கிண்ணங்கள் ஆகும்.

    * 'ஜி-20' உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான, நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம், இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.

    • சதுப்பு நிலக்காட்டை பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர்.
    • மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடிக்கு 'சல்யூட்' அடித்தார். உடனே மோடியும், இருக்கையில் அமர்ந்தவாறு தனது கையை தூக்கியவாறு 'ஹாய்' என்று கூறினார்.

    இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.

    • பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்
    • மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்

    பாலி:

    இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பு முடிந்து சில மணி நேரத்தில் பிரிட்டன் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, 'ஒவ்வொரு வருடமும் 3,000 திறமையான பட்டதாரிகளை இந்தியாவில் இருந்து வேலைக்கு அழைக்கும் சிறப்பு விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 30 வயது வரையிலான இந்தியர்கள், இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் பணியாற்ற முடியும்.

    இந்தத் திட்டம் பரஸ்பரம் இருக்கும் என்றும், இந்தியா-பிரிட்டன் உறவு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்றும் பிரிட்டன் அரசு கூறியிருக்கிறது.

    பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் மற்றும் நமது நாடுகளுக்கு இடையே வாழும் பாலமாக இருக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்தபோது, இந்திய மக்கள் அளித்த ஆதரவுக்காக பிரதமர் மோடிக்கு சுனக் நன்றி தெரிவித்ததாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சுனக் உடனான தனது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கருத்து தெரிவித்த மோடி, வலுவான இந்தியா-பிரிட்டன் உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையானது வர்த்தகம், இயக்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற ஒத்துழைப்பின் முக்கிய இலக்கை தொட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர், இது முதலீட்டுக்கான கதவுகளை திறக்கும் மற்றும் இரு நாடுகளிலும் வேலைகளை அதிகரிக்கவும், நமது ஆழமான கலாச்சார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
    • அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

    இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.

    நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார்.

    மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார்.

    பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர்.

    தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன.

    மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.

    உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

    இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.

    • அவர்களோடு பிரதமர் மோடி இயல்பாக பேசி மகிழ்ந்தார்.
    • இந்த சந்திப்பு மேளதாளங்களுடன் திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது.

    பாலி :

    இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று எத்தனையோ சந்திப்புகளை நடத்தினார். அவர் மனம் கவர்ந்த சந்திப்புகளில் முதல் இடம் பிடித்தது, அங்கு வாழ்கிற இந்திய மக்களை சந்தித்ததுதான் என்றால் அது மிகையல்ல.

    அவரை சந்திப்பதற்காக இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகளிலும், தலைப்பாகைகள் அணிந்து கொண்டும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் "பாரத மாதாவுக்கு ஜே" என்று ஆரவாரித்தனர். பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளைக் கூப்பி வணங்கினர். அவரும் புன்சிரிப்புடன் அவர்களது வணக்கத்தையும், வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டார்.

    அவர்களோடு பிரதமர் மோடி இயல்பாக பேசி மகிழ்ந்தார். இந்த சந்திப்பு மேளதாளங்களுடன் திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது. 'டிரம்' வாசித்தவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து சில வினாடிகள் 'டிரம்' இசைத்தார். இதைக்கண்ட அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர்.

    • வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர், வசிக்கும் நாட்டிற்காக, கடின உழைப்பை செலுத்துகின்றனர்.
    • இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் உயர்த்தி வருகின்றனர்.

    பாலி:

    இந்தோனேஷியா நாட்டில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, பாலி நகரில், இந்திய சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகள் உள்ளன. பாலி ஜத்ரா என்ற மிகப் பழமையான பாரம்பரியம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கிறது.

    இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் அவர்கள் உயர்த்தி வருகின்றனர். இந்தியா இந்தோனேஷியா உறவை வலுப்படுத்துவதிலும் இந்திய சமுதாயத்தினர் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு பார்வை உலக நலனுக்கானது.

    மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் இந்தோனேஷியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு திட்டமிடப்படவில்லை.

    பாலி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று முக்கிய சந்திப்பை நடத்தினர்.

    இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு மூலோபாய கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

    இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்தனர்.

    மேலும், ஜி20 மாநாட்டில் இரவு உணவு விருந்தின்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் ஒருவொருக்கொருவர் வணக்கம் செலுத்திக்கொண்டு நலம் விசாரித்தனர். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு குறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.

    • ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு.
    • ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று தொடங்கியது.

    பாலி:

    ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர்.

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

    இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.

    இதற்கிடையே, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.

    இந்நிலையில், இன்று காலை ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு உலக தலைவர்கள் வந்தனர். அவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். காலை தொடங்கிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார்.

    பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இருவரும் கை குலுக்கியபடி சிரித்துக் கொண்டு பேசினார். மேலும் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

    இன்று உலகம் ஜி-20 அமைப்பிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்கிய இந்தோனேசியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

    உலகளாவிய விநியோக சங்கிலிகள் அழிவில் உள்ளன. உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகளுக்கு ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடி மிகவும் கடுமையானது. அதை கையாள்வதற்கான நிதி திறன் அவர்களுக்கு இல்லை.

    உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐ.நா. போன்ற பல தரப்பு நிறுவனங்கள் தோல்வியடைந்து உள்ளன என்பதை ஒப்புக் கொள்ள நாம் தயங்கக் கூடாது. அவற்றில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்ய தவறிவிட்டோம்.

    கொரோனா தொற்று நோயின்போது இந்தியா தனது 130 கோடி குடிமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில் பல நாடுகளுக்கு உணவு தானியங்களும் வழங்கப்பட்டன.

    உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் உரங்களின் தற்போதைய பற்றாக்குறை மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவு நெருக்கடியாகும். உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியுடனும் பராமரிக்க பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

    இந்தியா இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. நிலையான உணவுக்காக தினை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்தி வருகிறது.

    உக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.

    கடந்த நூற்றாண்டில் 2-ம் உலக போர் உலகில் அழிவை ஏற்படுத்தியது. அதன்பிறகு அக்கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டேன். இப்போது அது நமது முறை.

    கொரோனா காலத்துக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது.

    உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூட்டு உறுதியை காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.

    2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிசக்தி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

    தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு, மலிவு நிதி, தொழில் நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்.

    அடுத்த ஆண்டு புத்தர் மற்றும் காந்தியின் தேசத்தில் ஜி-20 மாநாடு நடைபெறும்போது உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர்
    • பசி, பட்டினியால் தவித்த அதிகளை சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

    பண்டா ஆச்சே:

    புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். பாலியல் பலாத்காரம், கொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் வீடுகளை எரித்ததாக மியான்மர் ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ள நிலையில், சமீபத்தில் 117 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். மியான்மரில் இருந்து படகு மூலம் ஒரு ஒரு மாத காலமாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்கள், மலேசியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆச்சே கடற்பகுதியில் சிக்கித் தவித்த அவர்கள், மெவுனசா பாரோ கிராமத்தில் கரையேறி உள்ளனர்.

    பசி, பட்டினியால் தவித்த அவர்களை கடலோர கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். அகதிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    இதேபோல் கடந்த மார்ச் மாதம் 114 ரோஹிங்கியா அகதிகள், ஆச்சே மாகாணம் பைலயின் மாவட்ட கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார்.
    • கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாம்பென்:

    இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது நாட்டுக்கு திரும்பினார்.

    • உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்.
    • கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.

    பாலி:

    இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க பாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர், கை குலுக்கிக்கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் சந்தித்த பிரதமர் மோடி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    இந்நிலையில் ஜி20 மாநாட்டில் இன்று உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பருவ நிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சனைகள் ஆகியவை உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் சிக்கலில் உள்ளன. உணவு மற்றும் உரங்களைப் பொருத்தவரை போதுமான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

    உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும். உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.

    கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு அக்காலத் தலைவர்கள் அமைதி நிலவ தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைக்க உள்ளதாக தகவல்.
    • இந்திய வம்சாவளியினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்.

    பாலி:

    ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு, பாலி நகர விமான நிலையத்தில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    இந்தோனேஷிய அமைச்சர்கள், அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். மேலும் நடன கலைஞர்களும் வரவேற்பில் கலந்து கொண்டனர். பின்னர் விமான நிலையத்திற்கு வெளியேற திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்கள் அருகே சென்ற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பினர். 


    முன்னதாக ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேச்சு நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உலக தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும், ஜி20 மாநாட்டில், இந்தியாவின் சாதனைகளையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் தாம் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப் பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை மையமாக கொண்டு அமைந்திருக்கும் என்றும், இது அனைவருக்கும் சமமான வளர்ச்சி, பகிர்ந்தளிக்கப்பட்ட எதிர்காலம் என்ற கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமையும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதில் கலந்து கொள்ள ஜி20 நாடுகளின் உறுப்பினர்களையும், பிற அழைப்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் அழைக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    ×