search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியது.
    • ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:

    ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.

    ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • எதற்கும் தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு உதவும் வகையில் கூடுதல் படைகளை அங்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
    • காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது
    • இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே ‘ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் காசாவில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் காசா மீதான போரில் இஸ்ரேல் ராணுவம் 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த 2 செய்தி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட செய்தி விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 6 பேரிடம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி நிறுவனங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காசா போரில் இஸ்ரேல் ராணுவம் 'லேவண்டர்' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இது காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது. இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்தால் இலக்கை குறிவைத்து துல்லியமாக வான்தாக்குதலை நடத்த முடிகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பயங்கரவாதிகளாக இருப்பதற்கு சாத்தியமுள்ள 37 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களை இலக்குகளாக 'லேவண்டர்' கண்டறிந்துள்ளது.

    பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள், அடிக்கடி அலைபேசி மாற்றுபவர்கள் இப்படியான பல்வேறு அளவீடுகள் வழியாக லேவண்டர் இதனை செய்கிறது.

    இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே 'ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 'ஹப்சோரா' பயங்கரவாதிகள் புழங்க சாத்தியமுள்ள இடங்களை, கட்டடங்களை கண்டறியும். 'லேவண்டர்' மனிதர்களை கண்டறியும்.

    இது தவிர 3-வதாக 'வேர்இஸ் டாடி' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளது. இது லேவண்டரால் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை (பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் நபர்கள்) கண்காணித்து அவர்கள் வீடு திரும்பும்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கும்.

    அதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் அந்த வீட்டின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும். இப்படி பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் தாக்கப்படும்போது உடனிருப்பவர்கள் சேர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாதிகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு அமைப்பைப் பயன்படுத்தவில்லை. லேவண்டர் செயற்கை நுண்ணறிவு அமைப்பு அல்ல. அது வெறும் ஒரு தரவுத்தளம் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஃபா நகரில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் இலக்கு நிறைவடையும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.

    ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.

    இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.
    • எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டி உள்ளது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர்.

    போரில் காசா பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.

    சமீபத்தில் காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவை சுற்றி கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சில் ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. சில நாட்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு இருந்த இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியது.

    ஏற்கனவே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய தாக்குதல்களால் முற்றிலும் முடங்கியுள்ளது.

    இந்நிலையில் அல்-ஷிபா ஆஸ்பத்திரி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம், எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, காசாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி, சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு மனித கல்லறைகளுடன் காலியாக உள்ளது. அங்கு பலரது உடல்கள் கிடக்கின்றன.

    மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அல்லது சாம்பலாகிவிட்டன. குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.

    எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டி உள்ளது என்றார்.

    அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ கருவிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது.
    • பிரதமர் பதவி விலகக் கோரி இஸ்ரேலில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தைக் கடந்துள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
    • தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 2 பேரை நீக்கம் செய்து இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேரை கண்டித்துள்ளதாகவும் தெரிவித்தது.

    • காசாவுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிப் பொருட்கள் கிடைக்க அமெரிக்கா வலியுறுத்தல்.
    • இஸ்ரேல்- காசா முனை இடையிலான எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் ஒப்புதல்.

    ஹமாஸ்க்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் கடுமையான வகையில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் பெரும்பாலான எல்லைகளை அடைத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் உதவிபுரியம் நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மக்களை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை இஸ்ரேலை விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் டெலிபோனில் பேசினார். அப்போது காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதன்அடிப்படையில் எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் அனுமதி அளித்துள்ளது. இந்த எல்லை இஸ்ரேல்- காசா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல முடியும்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடியது. மக்கள் இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகள் காசாவிற்கு கிடைக்கும் வகையில் இந்த எல்லை திறந்து விடப்படுகிறது.

    அதேபோல் அஷ்தோத் துறைமுகத்தையும் பயன்படுத்த பாதுகாப்பு கேபினட் ஒப்பதல் அளித்துள்து.

    எரேஸ் எல்லை பெய்ட் ஹனோன் எனவும் அழைக்கப்படுகிறது. எரேஸ் எல்லை மக்கள் செல்வதற்காகவும், கெரேம் ஷலோம் பொருட்கள் கொண்டு செல்வதற்காவும் பயன்படுத்தப்பட்டது வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • =பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    • இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    டெல்அவில்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

    டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

    ×