search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அடிவாரத்தில் திறந்தவெளியில் சமையல் செய்யும் அய்யப்ப பக்தர்கள்
    X

    பழனி அடிவாரம் பகுதியில் திறந்தவெளியில் உணவு சமைக்கும் பக்தர்கள்.

    பழனி அடிவாரத்தில் திறந்தவெளியில் சமையல் செய்யும் அய்யப்ப பக்தர்கள்

    • தைப்பூசம், பங்குனிஉத்திரம், கோடைவிடுமுறை என பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தே காணப்படும்.
    • பொது இடத்தில் சமைத்து சாப்பிட்டபின் இலை மற்றும் கழிவுகளை அதேஇடத்தில் போட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

    பழனி:

    முருகனின் 3-ம் படைவீடான பழனியில் வருடந்தோறும் பக்தர்கள் வருகை இருந்துகொண்டே உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன்பிறகும் தைப்பூசம், பங்குனிஉத்திரம், கோடைவிடுமுறை என பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தே காணப்படும்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் குழுவாக வரும்போது பழனியில் சாமிதரிசனம் செய்து அடிவாரத்தில் உள்ள அய்யம்புளி சாலை, அருள்ஜோதிவீதி, கிரிவீதி மற்றும் சுற்றுலா பஸ்நிலையங்களிலும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

    சாப்பிட்டபின் இலை மற்றும் கழிவுகளை அதேஇடத்தில் போட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது. அய்யப்ப சீசன் தொடங்கியதில் இருந்தே கோவில்நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலைகளில் உணவு சமைப்பவர்களை கண்காணித்து குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் போடவைப்பது, பின்னர் அந்த குப்பைகள் அதிகளவு தேக்கமடையாமல் உடனுக்குடன் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் அதுபோன்று எதுவும் செய்யப்படாததால் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் நினைத்த இடத்தில் சிலிண்டர் மூலம் அடுப்பு வைத்து உணவு சமைத்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக காணப்படும் சமயங்களில் வரிசையாக பலர் இதுபோன்று உணவு சமைத்து வருவது கோவிலுக்கு முன்பு பொங்கல் வைப்பது போல உள்ளது.

    பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும்போது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான தொகையை கோவில் நிர்வாகம் வழங்கவேண்டும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் உணவு சமைத்து கழிவுகளை விட்டுச்சென்று விடுகின்றனர்.

    எனவே அவர்களுக்கு உணவு சமைப்பதற்கு தனியாக ஒரு இடம் அமைத்து அங்கேயே உடனுக்குடன் சுகாதார பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×