என் மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளம்
- நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது.
- துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை தினத்தன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள்.
பின்னர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சாப்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே பட்டாசு, புத்தாடைகள் ,இனிப்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தஞ்சையில் தீபாவளி இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சை காந்திஜி சாலை, கீழவாசல், புதிய பஸ் நிலையம் , பழைய பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கடை வீதிகள் திக்குமுக்காடின.
கிராமப்பகுதிகளில் இருந்து மக்கள் தஞ்சை மாநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தங்களுக்கு பிடித்த கடைகளுக்கு சென்று கலர், கலரான வண்ணமயமான துணிமணிகளை வாங்கி கொண்டு மக்கள் உற்சாகமாக சென்றனர்.
அதேபோல் பட்டாசு கடைகள், சுவீட் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
தஞ்சை அண்ணாசாலை, காந்திஜிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளிலும் துணிமணிகள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்பவர்கள் நத்தையை போல் மெதுவாக தான் செல்ல முடிந்தது.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பணம், நகையை திருடிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.