என் மலர்
உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. கூட்டணிக்கு வரவில்லை என்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும்- டிடிவி தினகரன்
- தி.மு.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்.
- பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் ஏற்க தயார்
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் அ.தி.மு.க.-வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்களுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் உள்ளனர்.
மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாதது மிகப்பெரிய அரசியல் தவறு என்பதை கட்சியினர் உணர்ந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியிடம் சரியாக எடுத்துக்கூறவில்லை. வரும் காலங்களில் அம்மாவின் கட்சியான அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் உறுதியாக அவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் சேருவது தான் சிறந்தது. அவர்கள் வேறு யாருடன் கூட்டணி அமைத்தாலும் அது மெகா கூட்டணியாக அமையாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு அ.தி.மு.க. அரசை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்கிற கேள்வி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் பயத்தால் தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார். அவர் தி.மு.க. வுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது.
அ.திமு.க.வில் என்னுடைய சிலிப்பர் செல் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.