search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார்.
    • மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக கடந்த 3-ந்தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தெலுங்கு அமைப்புகள் சார்பில் கஸ்தூரி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் வீட்டுக்கு சம்மன் அளிப்பதற்காக சென்றனர். ஆனால் கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்.

    இதற்கிடையே மதுரையிலும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.

    தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சை நீதிபதியும் கண்டித்து இருந்தார்.

    முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதையடுத்து நடிகை கஸ்தூரியை பிடிப்பதற்காக சென்னை மற்றும் மதுரை போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளரான அரிகரன் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பப்பலக்குண்டா என்ற இடத்தில் தயாரிப்பாளரின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அங்கு வைத்தே அவரிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சென்னைக்கு காரில் அழைத்து வருகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனர். தெலுங்கு பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியது தொடர்பாக கஸ்தூரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர் அளிக்கும் தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்கிறார்கள்

    இதைத் தொடர்ந்து கஸ்தூரி எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று மாலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிபதியின் வீட்டில் கஸ்தூரியை போலீசார் ஆஜர் படுத்துகிறார்கள். அதன் பிறகு அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். சென்னை போலீசாரின் நடவடிக்கை முடிந்ததும் மதுரை போலீசார் தாங்கள் பதிவு செய்து உள்ள வழக்கில் கஸ்தூரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார். இதற்கு முன்பு பல்வேறு விவகாரங்களிலும் அவர் தலையிட்டு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    அந்த வகையில்தான் தெலுங்கு பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    எழும்பூர் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே நடிகை கஸ்தூரியை தற்போது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். கஸ்தூரி மீது கோயம்பேடு போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார்கள் மீதும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே தயாரிப்பாளர் அரிகரன் வீட்டில் கஸ்தூரி சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    தமிழிலில் 'அமைதிப்படை' உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற கஸ்தூரி தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வருகிறார். தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான "அன்னமயா" திரைப்படம் மிகவும் பிரபலமான படமாகும். இது தவிர மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கஸ்தூரிக்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் இருந்து தப்பிச் சென்ற கஸ்தூரி ஐதராபாத் அருகே உள்ள பாப்புல குண்டா பகுதியில் தயாரிப்பாளர் அரிகரனின் பங்களா வீட்டுக்கு சென்று அங்கு கஸ்தூரி பதுங்கி இருந்து உள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை போட்டிருந்த கஸ்தூரி முன் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியில் வரலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் கஸ்தூரியை எழும்பூர் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

    கஸ்தூரி தலைமறைவானவுடன் சினிமா வட்டாரத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர்களது பட்டியலையும் சேகரித்தனர்.

    இதன் பிறகே தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனின் பங்களாவில் கஸ்தூரி இருப்பதை கண்டு பிடித்த போலீசார் ஐதராபாத்துக்கு விரைந்து சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நவம்பர் 28-ந்தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு.
    • காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் தீவிரம் அடையவில்லை.

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் விட்டு விட்டு மழை கொட்டுகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை கொட்டிய நிலையில் பின்னர் கனமழை இல்லை. பரவலாக லேசான மழையே பெய்கிறது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வருகிற 25-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.

    சென்னையில் சராசரியாக நவம்பர் மாதத்தில் மழையின் அளவு 37 செ.மீ ட்டராக இருக்கும். ஆனால் தற்போது 57 செ.மீ.வரை பதிவாகி உள்ளது. இது 6 சதவீதம் அதிகம் ஆகும்.

    நுங்கம்பாக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

    நவம்பர் 28-ந்தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் வானிலை மாற்றங்கள் பொதுவாக தமிழகத்தின் வடக்கு பகுதி அல்லது ஆந்திராவின் தெற்கு பகுதியை நோக்கி நகரும்.

    காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும். வருகிற 4-5 நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும்.

    ஆனால் முற்றிலும் வறண்டு போகாது. தெற்கு பகுதியில் சில இடங்களில் லோசான மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 செல்சியஸ் முதல் 33 செல்சியஸ் வரையும் குறைந் தபட்சம் 25 செல்சியஸ் வரையும் இருக்கும் என்றார்.

    • அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.

    பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென், மேற்கு, டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறாவளி புயல்கள், இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    வருகிற 20-ந் தேதிக்கு பிறகு கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும் என்பதால், இம்மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை அடுத்தடுத்த புயல் சின்னங்களை வங்கக்கடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழையை கொடுக்கவில்லை என்றாலும், நேற்று முன்தினம் முதல் கிழக்கு திசை காற்றினால் தமிழகத்தில் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் தென், மேற்கு, டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்றுடன் மழை விலகும் எனவும், அதன் பின்னர், நாளை (திங்கட்கிழமை) கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) டெல்டா, மேற்கு மாவட்டங்களிலும் மழை விலகும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    மேலும் அவர், 'சென்னையில் இன்று இரவில் இருந்தும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக வருகிற 20-ந் தேதியில் இருந்தும் பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வருகிற 23 (சனிக்கிழமை) அல்லது 24 (ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்றும்' கூறினார்.

    • பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
    • பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, இன்று அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த ஆண்டு விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூடுதல் விமான சேவை ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி தை முதல் நாள் வரை மகர ஜோதியை காண செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் சபரிமலையில் திறக்கும் நடை மகரஜோதி வரை குறிப்பிட்ட காலங்களில் மட்டும் திறப்பார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடியுடன் செல்ல இந்திய விமான நிலைய ஆணையகம், விமான ஆணையக பாதுகாப்பு துறை அனுமதி அளித்து உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் தற்போது, விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக தினமும் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை என 10 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சபரிமலை நடை திறப்புக்காக 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள் என 14 விமான சேவைகள் இயக்கப்பட்டன.

    ஆனால் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சென்னையில் இருந்து கொச்சிக்கு 8 புறப்பாடு விமானங்கள், கொச்சியில் இருந்து சென்னைக்கு 8 வருகை விமானங்கள் என விமான சேவை அதிகரித்து உள்ளது. மேலும் சென்னை- பெங்களூரு- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் என மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு, சென்னை- கொச்சி இடையே நேரடி விமான சேவையும் உள்ளது. இந்த ஆண்டு விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து, இரவு 9:25 மணி வரையில், 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியில் இருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமான சேவை ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
    • பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இந்தியக்குடியரசு கட்சியின் மாநில தலைவர் தமிழரசன், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டு, விசாரணையில் இழுக்கப்படாமல் உள்ளவர்களை மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டரீதியான போராட்டத்தை தொடர வேண்டும். இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது கேள்வியை எழுப்புகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எந்த அரசு ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் நாங்கள் கேள்வியை கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.

    பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரின் மனைவியை நாம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்கலாம். வெற்றி, தோல்வி விசயமல்ல. அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்தில் அனுப்புவதை நாம் திட்டமாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 3 சதவீதம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆளும் போது, நாம் ஏன் ஆள முடியாது. அரசியல் அதிகாரத்தில் நமக்கான தேவைகளை அடைய திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
    • மாலை 5 மணிக்கு பின்னர் ஞாயிறு கால அட்டவணையின்படி ரெயில் சேவை வழக்கமாக இயங்கும்.

    சென்னை:

    சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக நேற்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் பணிமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மொத்தம் 34 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு பின்னர் ஞாயிறு கால அட்டவணையின்படி ரெயில் சேவை வழக்கமாக இயங்கும்.

    மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் நலன் கருதி கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டுமென தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பயணிகள் சரியான திட்டமிடலுடன் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஐசியுவிற்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்

    சென்னை:

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்

    இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

    • இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் 27 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • தனியார் மருத்துவமனையில் கிரிதரன், பவித்ரா இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

    சென்னை குன்றத்தூரில் வசிப்பவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் விஷாலினி (6 வயது), சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    அவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

    தனியார் மருத்துவமனையில் கிரிதரன், பவித்ரா இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த தி.நகரில் உள்ள Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை, வேளாண்துறை கூடுதல் இயக்குனர் அமுதா, சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
    • லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று முன்தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று முன்தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா வீட்டில் நேற்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

    அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன்.

    தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல. அமலாக்கத்துறையின் சோதனை ஆணை (SEARCH ORDER)எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதையும் ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அந்தவகையில் இச்சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

    இந்த சோதனை குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள். அதிகார வர்க்கத்திற்கு விலைபோனவர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பரப்பப்பட்டு வருகிறது.

    அரசியல் அறிவியல் மாணவனாக பதினைந்து வயதிலே சமத்துவ சித்தாந்த கருத்தியலில் பயணிக்கத் துவங்கியவன் நான். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் யுத்த களத்தில், தேர்தல் வியூக வகுப்பாளராக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காகவும், மக்களுக்கான அரசை உருவாக்கவும் களப்பணியாற்றியுள்ளேன்.

    அந்த பயணத்தின் நீட்சியாக இப்போது நேரடி அரசியலிலும் களமிறங்கியுள்ள எனக்கு இது போன்றவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்திற்குத் தடையாக மாறாது.

    என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழியில் மத பெரும்பான்மைவாதம், சாதிய ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் உள்ளிட்டவற்றிற்கான எனது பிரச்சாரப் பயணத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தேர்தல் அரசியலில் பேரறிஞர் அண்ணா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் கொண்ட கொள்கைகளில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றகை போல பதிய அரசியல் பாகையை உருவாக்குவோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×