search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • இரண்டு கட்சியினருக்கும் (தி.மு.க.-அ.தி.மு.க.) மக்களைப் பற்றி அக்கறை இல்லை.
    • உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது.

    சென்னையில் கடந்த 2022-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம் எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 100 பேருக்கு மேல் முன் ஜாமின் பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது.

    இரண்டு கட்சியினருக்கும் (தி.மு.க.-அ.தி.மு.க.) மக்களைப் பற்றி அக்கறை இல்லை. உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல்துறையினர் தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல்துறையினரை குற்றம் சாட்டுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு கடித்துள்ளது.
    • அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததையும் காட்டுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள் செய்ய வேண்டிய வேலையை எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியப்போக்கோடு வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.

    இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு கடித்த நிலையில் மீண்டும் மாணவர்கள் டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததையும் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.
    • இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லூர் ராஜூ தரப்பில், எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.

    ஆனால் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசுவதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அதனால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வேல்முருகன், அதிமுக, திமுக கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனரே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என்று தனது கருத்தை தெரிவித்த நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்வதாக கூறினார். 

    • ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்
    • டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர்.

    டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவதை தொடக்க நிலையிலேயே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது.
    • அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.

    பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர் அண்மையில் அத்துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட நான், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஊதிய செலவை மிச்சப்படுத்தும் நோக்குடன், 497 ஆசிரியர்களை விடுதிக்காப்பாளர் பணி செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விற்கப்போகிறார்களா? என்று வினா எழுப்பி கண்டித்திருந்தேன்.

    அடுத்த சிறிது நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்டபோது,''இது பற்றி எனக்குத் தெரியாது. இது பி.சி துறையில் வருகிறதா, எங்கள் துறையில் வருகிறதா? எனத் தெரியவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆசிரியர்கள் விற்பனை தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனரின் சுற்றறிக்கை கடந்த 7-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் ஒரு வாரமாகியும் இது குறித்து அமைச்சருக்கே எதுவும் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது. இது தொடர்பான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரின் கடிதம் பள்ளிக்கல்வித்துறைக்கு செப்டம்பர் 23-ம் நாள் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் 44 நாட்கள் கழித்து தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடைப்பட்ட ஒன்றரை மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

    இது இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிலையில் விவாதித்து கொள்கை முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியமில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாமல், ஆசிரியர்களை விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதற்கான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் அனுப்புகிறார் என்றால் அந்த முடிவை எடுத்தவர் யார்? இந்த வினாவுக்கான விடையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. அதை தெரிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை.

    எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும். பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் இருந்த நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. அடுத்த 3 நாட்களில் ஒரு பவுன் ரூ.58 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது.

    அதன் பிறகும் விலை குறைந்தபாடில்லை. மேலும் அதிகரித்தே காணப்பட்டு, கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு பவுன் ரூ.59 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியது.

    இப்படியே நீடித்தால் ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்றே சொல்லப்பட்டது. விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. எப்போதுதான் விலை குறையும்? என்ற எதிர்பார்ப்பையும் கொடுத்தது.

    இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு எதிரொலியால் கடந்த 7-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது.

    அதற்கு மறுநாள் விலை மீண்டும் அதிகரித்து, அவ்வளவுதானா விலை குறைவு என நினைக்க வைத்தது. ஆனால் அதன் பிறகு விலை 'மளமள'வென சரிந்து வருவதை பார்க்க முடிகிறது.

    எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டு நேற்று ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    13-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,360

    12-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,680

    11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760

    10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    13-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    12-11-2024- ஒரு கிராம் ரூ. 100

    11-11-2024- ஒரு கிராம் ரூ. 102

    10-11-2024- ஒரு கிராம் ரூ. 103

    • முறையான சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
    • மருத்துவமனை நிர்வாகிகளுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இதனால் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

    இளைஞர் உயிரிழந்து விட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் தான் மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதற்குள் மீண்டும் அதே மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் புகார் அளித்துள்ளார்.
    • ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின்மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மின்மாற்றி கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி முறைகேடு செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் புகார் அளித்துள்ளார்.

    2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்க, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின்மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    டெண்டர் விதிகளை பின்பற்றாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் டெண்டர் விடப்பட்டதே இழப்பிற்கு காரணம். முறைகேடுக்கு காரணமான அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

    கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா வீட்டில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து கோவையில் உள்ள லாட்டரி மார்ட்டின் வீட்டிலும், அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

    • வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும்.
    • இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது.

    சென்னை:

    நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார்.

    நீல வானில், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திர கூட்டங்கள் அலங்கரித்தாலும், பகல் நேரத்தில் பஞ்சு போன்ற வெண் மேகக் கூட்டங்கள் மட்டுமே காட்சி அளிக்கும். ஆனால், எப்போதாவது தோன்றும் வானவில், வானில் வர்ணஜாலம் காட்டி கண்களுக்கு விருந்து படைப்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதுவே, இரட்டை வானவில்லாக தோன்றினால், இரட்டை சந்தோஷம்தான். அப்படியொரு காட்சி நேற்று மாலை சென்னையில் தோன்றி மக்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

    பொதுவாக வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். அதாவது, காலையில் மேற்கு திசையிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். நண்பகல் நேரத்தில் வானவில் தோன்றாது.

    இனி வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி பார்ப்போம். சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி 7 வண்ணங்களாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) வில்போல் வளைந்து வானவில்லாக தோன்றுகிறது.

    இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது இரண்டாவது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.

    அப்படியொரு காட்சியைத்தான் நேற்று சென்னைவாசிகள் தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே வானில் கண்டு ரசித்து பரவசம் அடைந்தார்கள்.

    இதற்கு முன்பு சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதியும் இதேபோல் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
    • நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி.சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதே விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரவீண் சமாதானம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோரிக்கையும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள கோரிக்கையும் வெவ்வேறானது என்றார்.

    அதற்கு நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துக் கொள்ளலாமே? என்று கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்குகளை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 3 செ.மீ, பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூவிருந்தவல்லியில் தலா 2 செ.மீ மழை பதிவு.

    ஆர்.கே.பேட்டை, ஆவடி, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ×