search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    சீமை கருவேலமரம், உயர்நீதிமன்றம்(கோப்பு படம்)

    சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    • சீமைக் கருவேல மரங்களை ஏலம் மூலம் விற்க அனுமதி வழங்க வேண்டும்.
    • சீமைக் கருவேல மரங்களை அகற்றிய இடங்களில் பிற மரங்களை நட வேண்டும்

    தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது

    அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள், நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை மொத்தமாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பான டெண்டர் நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணையின் போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துக்களுக்கும் அறிவுறுத்த, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும், அகற்றப்பட்ட சீமைக் கருவேல மரங்களை ஏலம் மூலம் விற்க பஞ்சாயத்துக்களுக்கு அனுமதி வழங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×