search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை அருகே 950 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
    X

    தஞ்சை அருகே 950 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

    • கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண், ரேஷன் அரிசி பதுக்கலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,
    சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தஞ்சை அருகே கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து நடத்திய விசாரணையில் மேலகபிஸ்தலத்தை சேர்ந்த ரகுபதி (வயது 32) என்பவர் மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களிடம் புழுங்கல் அரிசியை விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரகுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பதுக்கி வைத்திருந்த 950 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×