search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம், புதுவையில் பா.ம.க. கூட்டணி ஆட்சி- ராமதாஸ் கணிப்பு
    X

    தமிழகம், புதுவையில் பா.ம.க. கூட்டணி ஆட்சி- ராமதாஸ் கணிப்பு

    • தி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது.
    • தமிழ்நாட்டில் இனி தி.மு.க. ஆட்சி கிடையாது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-

    கட்சி தொடங்கியதற்கான காரணம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். கட்சி தொடங்கி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனாலும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினேன். இந்த போராட்டத்துக்கு காரணம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான்.

    பா.ம.க.வுக்கு தனி வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன அந்த கட்சிகளுக்கு இல்லாத சிறப்பு பாமகவுக்கு உள்ளது. பா.ம.க. மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகத்தான் வன்னியர் சங்கத்தை தொடங்கினேன். இப்போதும் பெருமான்மையான மக்கள் அதே நிலையில் தான் உள்ளனர்.

    இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்திய நம் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி 21 பேரை கொன்றது ஒரு அரசு. நாம் கடுமையாக உழைத்தால் குறைந்தது 50 தொகுதிகளில் வெற்றிபெற முடியும். தி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. ஒருநாள்கூட இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது.

    தமிழ்நாட்டில் இனி தி.மு.க. ஆட்சி கிடையாது. இந்த கூட்டம் முடிந்ததும் தேர்தல் பணி தொடங்க வேண்டும். இனியும் தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடரக்கூடாது.

    இதற்கு 10 காரணங்கள் உள்ளன இதனை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். ஏழு இடங்களில் நம் கட்சி வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

    அடுத்த நம்முடைய கூட்டணி ஆட்சிதான். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தவறு செய்தால் அடுத்த முறை தவறு செய்வோம் என அர்த்தமில்லை. இனி புதிய பாதையில் செல்வோம். என்ன பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அல்லது அதற்கு முன்பாகவோ முடிவு செய்வேன். நாம் இடம் பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் அந்த ஆட்சியில் நாம் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×