என் மலர்
உள்ளூர் செய்திகள்
கனமழையால் 19,306 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு- கலெக்டர் தகவல்
- நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
- மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.
விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.
நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.