search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு -திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குனியமுத்தூர்:

    கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஈச்சனாரி விநாயகர் கோவில். இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அன்று காலை திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து மூத்த பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜையும், 5.45 மணிக்கு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

    காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் ஈச்சனாரி விநாயகர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.

    கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு வழிபட்டார். கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன், கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, கோவை கோனியம்மன் கோவில் மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்த அதிகாரிகளுடன் அவர் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். கோவை கோனியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர் ராஜவீதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கும் அமைச்சர் சேகர்பாபு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

    Next Story
    ×