search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு கூடுதல் நிதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
    X

    விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு கூடுதல் நிதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

    • இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் உள்பட 9 பேர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஷேர் ஆட்டோ திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கு உத்தரவிட்டார். ஆனால் இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவர்கள் வந்தனர். பின்னர் திடீரென்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ போன்றவை எங்களுக்கு தேவையில்லை. மேலும் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்குவதோடு, அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் மாணவர்கள் அங்கிருந்து தலைமை தபால் நிலையம் வந்து மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்காமல் மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். உப்பனாறு பகுதியில் வரும் போது தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு நின்றனர். அவர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர். அதனையும் ஏற்காத மாணவர்கள் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்தனர்.

    அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் நீங்கள் வாய்மொழி வழியாகத்தான் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என கூறுகிறீர்கள். கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் வரவேண்டும் என்றனர். கலெக்டர் வெளியூர் சென்று இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×