search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வரும்போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரும்படையான், கிருஷ்ண பெருமாள், வடிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெரும்படையான் (20), கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல் (வயது17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 38) என்பவரை பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது.
    • ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, செப்டம்பர் முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை கடலில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் சரக்கு போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தோணி போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த 1-ந்தேதி மாலத்தீவுக்கு புறப்படும் தோணியில் காய்கறிகள், மண், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், எந்திர தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. அந்த சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு தோணியில் சரக்கு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தோணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் குலசேகரன்பட்டினம்.

    இங்கு வீற்றிற்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன். அம்மையும், அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத காட்சியாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.


    இச்சிறப்பு மிக்க தசரா திருவிழாவையொட்டி நேற்று காளி பூஜையும், அன்ன தானமும் நடந்ததது. நேற்றுஇரவு 9 மணிக்கு அம்மனுக்குகாப்பு கட்டினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர்.

    கோவில் கலையரங்கத்தில் சிவலூர் தசரா குழு சார்பிலும், கடற்கரையில் சந்தையடியூர் தசரா குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் தினசரிமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடியேற்றம் நடந்தவுடன் கோவில் பூசாரி விரதம் இருந்து வந்த பக்தர்களுக்கு காப்பு கட்டினார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

    நாளை (4-ந் முதல் வருகிற 11-ந்தேதி வரை தினசரி காலை முதல் இரவு வரைசிறப்பு அபிஷேக ஆரா தனையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

    2-ம் திருநாளில் அன்னை கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலம், 3-ம் நாள் திருவிழாவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், 4-ம் திருநாளில் அன்னை மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 5-ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம், 6-ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலம், 7-ம் திருநாளில் அன்னை பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், 8-ம் திருநாளில் கமல வாகனத்தில் கச லெட்சுமி திருக்கோலம், 9-ம் திருநாளில் அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு அன்னை வீதி உலாவரும்.

    வருகிற 8-ந்தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

    அப்போது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா குழு வினர்கள் காட்சியளிப்பார்கள்.

    மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி 10-ம் திருநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும்.

    காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 

    • மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.
    • விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

    திருச்செந்தூர்:

    புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாதம்தோறும் அமாவாசை திதி வரும் அந்த திதிகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் சிலர் தை மாதம் வரும் அமாவாசை, ஆடி மாத அமாவாசை நாட்களில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    இந்த நாட்களில் வரும் அமாவாசைக்கு திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் ஒரு வருட அமாவாசையில் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு கடல், ஆறு ஆகிய பகுதிகளில் நீராடி எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் வீட்டிற்கு வந்த மூதாதையர்கள் அகம் மகிழ்ந்து நம்மை வாழ்த்திப் செல்வார்கள் என்பது ஐதீகம்.

    அதேபோல் விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம். 

    • பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.
    • ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள்.

    தூத்துக்குடி:

    நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தூத்துக்குடி பாகம்பிரியாள்-சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் சிவன் கோவில் சன்னதியில் உள்ள மூலவர், சண்முகர், பிள்ளையார், நடராஜர் தளங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

    இதேபோல் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பள்ளி வாசல் ஆகியவைகளுக்கு சென்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், கண்ணன், ரமேஸ் கார்த்திகேயன், மாரிமுத்து, புதிய துறைமுகம் லெட்சுமணன், வெலிங்டன், உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். 

    • சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.
    • பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு குறிப்பாக எதிரிகளை வீழ்த்தும் சத்ரு சம்ஹார பூஜை நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமானையும் தரிசிக்க வாய்ப்பு உளளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

    • மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் அங்குள்ள ஓட்டு வீடுகளில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டது. சுப்பிரமணியன், ஜோதி, சுடலை, பெருமாள், மகரஜோதி ஆகியோரது வீடுகளின் சுவர் மற்றும் ஓடுகள் சேதம் அடைந்துள்ளன.

    மேலும் மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர். பொருட்கள் மட்டும் சேதமடைந்தது. ஓடுகள் உடைந்த வீட்டினை தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்விரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாபாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

    • முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
    • பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.

    கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரம் ரூபாய் செலுத்தி விரைவு தரிசனத்தில் சென்று முருகப்பெருமானை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 1000 ரூபாய் விரைவு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனமும், ரூ.100 சிறப்பு தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

    • சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும்போதே சொன்னார்.
    • கூவம் ஆற்றை சீரமைக்க ரூ.500 கோடி செலவு செய்ததற்கான வெள்ளையறிக்கையை மேயர் பிரியா வெளியிட வேண்டும்.

    தூத்துக்குடி:

    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார்.

    ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

    இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

    மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

    தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    • பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு நாள் தோறும் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    • 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). பாத்திர வியாபாரி.

    இவர் நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை-கூட்டாம்புளி சாலையில் மனைவியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில், தூத்துக்குடி சிப்காட் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்த மாரிதங்கம்(23) என்பவரை முன்பகை காரணமாக பாத்திர வியாபாரி முருகன் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு மடத்தூர் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக மாரிதங்கம் மற்றும் சிலர் சேர்ந்து தற்போது முருகனை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலை கும்பலை சேர்ந்த மாரிதங்கம் மற்றும் அவரது கூட்டாளிகளான புதுக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த வினித்(22), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரீஸ்வரன் என்ற மாதேஷ் ஆகியோர் மறவன்மடம்-புதுக்கோட்டை இடையே உள்ள தட்டப்பாறை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தப்பி செல்ல முயன்றனர்.

    தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டப்பாறை சாலை பகுதிகளை முழுமையாக சுற்றி வளைத்தனர். இதனால் அந்த கும்பல் காட்டுக்குள் தப்பி ஓடினர். போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து பிடிக்க சென்றபோது ஓடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாரிதங்கத்திற்கு கை முறிவும், மாதேஸ்வரனுக்கு கால் முறிவும் ஏற்பட்டது. வினித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து 3 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.
    • 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இத்திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணியும் முன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.

    விரதம் தொடங்கும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புவை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை பிரித்து 10-ம் திருநாள் அன்று கோவிலில் சேர்ப்பார்கள்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும்.

    ×