search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
    X

    கோத்தகிரியில் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

    • வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பூசனகுமார், குன்னூர் டி.எஸ்.பி குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (அமலாக்கம்) விஜயா ,கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, தீயணைப்புத்துறை ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது.

    அப்போது வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டிய கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா, அவசர கதவுகள் சரியாக திறக்கப்படுகிறதா? என்று பரிசோதனை செய்தனர்.

    அப்போது காமிரா சரியாக எந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு அம்சங்கள் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது, மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, பள்ளி வாகனங்களில் இருக்கை அளவுக்கு ஏற்ப மட்டுமே குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும், வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என்பவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் தவறான செயலில் ஈடுபடுபவர் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் தகுதி சான்று இல்லாத வாகனங்களை மீண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் பள்ளி வாகன தகுதி ஆய்வின் போது வாகனங்களை ஆய்வு மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×