search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கம்பனிடம் சிக்கிய கண்ணதாசன்
    X

    கம்பனிடம் சிக்கிய கண்ணதாசன்

    • பாடல்களை எளிமைப்படுத்தி அவர் திரையிசையில் பயன்படுத்தியிருக்கின்றார்.
    • இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிப் பயணப்படுகின்றார்.

    கவியரசு கண்ணதாசன் கம்பனைத் தாக்கிப் பேசவேண்டும், எழுதவேண்டும் எனும் நோக்கத்தோடுதான் கம்பராமாயணத்தைக் கற்கத் தொடங்கினார். ஆனால் என்ன விந்தை! அதனைக் கற்கத் தொடங்கியபின்பு அதில் முற்றாய்த் தோய்ந்துபோனார்; கம்பனின் நேசன் ஆனார்! அதன் விளைவாய்ப் பல கம்பராமாயணப் பாடல்களை எளிமைப்படுத்தி அவர் திரையிசையில் பயன்படுத்தியிருக்கின்றார். அவற்றுள் ஒரு பாடலும் அதன் பின்னணியும் வருமாறு:

    இராம இலக்குவர்களின் துணையோடு தாடகையை வதம்செய்த விசுவாமித்திர முனிவர், அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிப் பயணப்படுகின்றார். அப்போது அவ்வழியில் கருங்கல் ஒன்று கிடக்கின்றது. அதன்மீது தன் பாதம் பதிக்கிறான் இராமன். உடனே ஓர் அதிசயம் நிகழ்கிறது; கல்லுருவிலிருந்து தன் முந்தைய நல்லுருப்பெற்று எழுந்தாள் காரிகை ஒருத்தி.

    கல்லொன்று காரிகையான அதிசயங்கண்டு வியந்த காகுத்தன் விசுவாமித்திரரை நோக்க, அவர் அகலிகை கல்லான வரலாற்றை அவனிடம் விலாவாரியாக விளக்கிவிட்டு, இராமனின் கைவண்ணத்தால் (அம்பெய்திக் கொன்ற செயல்) தாடகை வதைக்கப்பட்டதையும், கால்வண்ணத்தால் (பாதம் பட்டுக் கல்லுக்கு உயிர்வந்த செயல்) அகலிகை உயிர்பெற்றதையும் புகழ்ந்து ஒரு பாட்டே பாடிவிடுகிறார்.

    "இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

    இனி இந்த உலகுக்கு எல்லாம்

    உய்வண்ணம் அன்றி மற்றுஓர்

    துயர் வண்ணம் உறுவது உண்டோ?

    மை வண்ணத்து அரக்கி போரில்

    மழை வண்ணத்து அண்ணலே உன்

    கை வண்ணம் அங்குக் கண்டேன்

    கால் வண்ணம் இங்குக் கண்டேன்."

    இந்த "வண்ண"ப் பாடல் கவியரசு கண்ணதாசனின் எண்ணத்தைக் கவர்ந்துவிட, இதனைத் திரைப்படப் பாடலில் பயன்படுத்த ஏற்றதோர் சமயத்தை எதிர்நோக்கியிருந்தார் அவர்.

    1962-இல் வெளியான 'பாசம்' படத்தில் திருமண நாளன்று தலைவனும் தலைவியும் டூயட் பாடுவதுபோல் ஒரு சூழலை இயக்குநர் டி.ஆர். இராமண்ணா மெல்லிசை மன்னர்களிடம் சுட்ட, அதற்கு அவர்கள் அருமையானதொரு மெட்டுக் கட்ட, 'வண்ணம்' என்ற சொல் அப்பாடலெங்கும் நிறைந்திருக்கும் வண்ணம் கவியரசு கண்ணதாசன் அற்புதமாய் வார்த்தைகளைக் கொட்ட, பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ் குரல்களில் உருவானது காலத்தால் அழியாத காவியப் பாடலொன்று!

    "பால் வண்ணம் பருவம் கண்டு

    வேல் வண்ணம் விழிகள் கண்டு

    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்!

    கண் வண்ணம் அங்கே கண்டேன்

    கை வண்ணம் இங்கே கண்டேன்

    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்……."

    -மேகலா இராமமூர்த்தி

    Next Story
    ×