search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது- கெஜ்ரிவால்.
    • மார்ச் 8-ந்தேதி டெல்லி பெண்களின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    டெல்லியின் 4-வது பெண் முதல்வர் இவராவார். இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். தற்போது 4-வது பெண் முதல்வராக இன்று மதியம் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ரேகா குப்தா பதவி ஏற்பது குறித்து கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ, அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது.

    பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. சொன்னபடி மார்ச் 8-ந்தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    அவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார்.
    • 1995-ல் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, ரேகா குப்தா உடன் 1995-ஆம் ஆண்டு ஒன்றாக பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

    அல்கா லம்பா

    எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த அல்கா லம்பா "1995-ம் ஆண்டு நானும், ரேகா குப்தாவும் இணைந்து பதவி ஏற்றபோது எடுத்த மறக்க முடியாத போட்டோ. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் பதவிக்கு என்.எஸ்.யு.ஐ. சார்பில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் வெற்றி பெற்றார். வாழ்த்துகள்.

    4-வது பெண் முதல்வரை பெற இருக்கும் டெல்லிக்கு வாழ்த்துகள். யமுனை தூய்மைப்படுத்தப்படும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ரேகா குப்தா

    பின்னர் 1996-ஆம் ஆண்டு ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவராக தேர்வு பெற்றார்.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து அல்கா லம்பா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    • கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக விரும்புவதாக எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர்.
    • டெல்லியில் எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும் என்றார்.

    சண்டிகர்:

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்தது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கெஜ்ரிவால் விரைவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரியான பகவந்த் மான் சர்துல்கர் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எதிர்க்கட்சித் தலைவர்கள் தாங்கள் யூகிப்பதை எல்லாம் வதந்தியாகப் பரப்பி வருகின்றனர்.

    எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இது எங்கள் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம். ஆனால், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினார் என எதிர்க்கட்சியினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். அதில் துளியும் உண்மை இல்லை.

    டெல்லியில் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும்.

    எங்கள் ஒருங்கிணைப்பாளர் கட்சியை கட்டமைக்கும் பணியில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவார் என தெரிவித்தார்.

    • அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது.
    • டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களைக் கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியின் அடுத்த முதல் மந்திரி யார் என நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா தனது ஆதரவாளர்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதையடுத்து, அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார்.
    • கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் யாஷ்டிகா தங்கம் வென்றிருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா (17), 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

    இந்நிலையில், யாஷ்டிகா பயிற்சியின் போது 270 கிலோ எடையை பயிற்சியாளர் உதவியுடன் தூக்க முயன்றார். அப்போது பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    • 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
    • டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களை கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    எனினும், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், டெல்லியில் முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ரேகா குப்தா டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்டுள்ளார்.
    • மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர் சுனில் குமார், "பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனக்கு வாட்சப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பினார். பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறிய அவர், தன் மாமியாரைக் கொல்ல 2 மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொன்னாள்.

    உயிர்களை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் கடமை, உயிரை எடுப்பது அல்ல என்று அவளிடம் நான் கூறினேன்.ஆனால் அவளோ, மாத்திரைகளின் பெயர்களை மெசேஜ் அனுப்புமாறு என்னிடம் கெஞ்சினார். நான் அதிர்ச்சியடைந்து அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன். தொடர்ந்து சஹானா தொடர்ந்து பலமுறை மெசேஜ் அனுப்பி வந்தார்.

    பின்னர் சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினாள். ஏன் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கிறாய் என்று நான் கேட்டபோது, அவளுடைய மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், இனிமேலும் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாது என்று கூறினார். ஆகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்" என்று தெரிவித்தார்.

    • ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் உரிமம் பெற்றது.

    இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது.

    பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2005 ஆம் ஆண்டில், அரசாங்கம் மீண்டும் திறந்த உரிமக் கொள்கை மூலம் தனியார் நிறுவனங்களைத் தேடியது.

    அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது. ஆனால் இந்த ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது.

    இதற்கிடையில், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) ஜியோமைசூரில் 40% பங்குகளை வாங்கியது. மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி 2021 இல் சோதனைகளைத் தொடங்கியது. மேலும் ஒரு சிறிய செயலாக்க யுனிட்டை நிறுவி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.

     

    இதுகுறித்து பேசிய ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத், இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆந்திர பிரதேச அரசு சுற்றுசூழல் அனுமதியை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்று மாதங்களுக்குள் தங்க உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன்படி இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

    • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் எல்.ஐ.சி.க்கு ரூ.18,385 கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்நிலையில், எல்.ஐ.சி. முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில், ITC மூலம் ரூ.11,863 கோடியும் லார்சன் & டூப்ரோ மூலம் ரூ.6,713 கோடியும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.5,647 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.18,385 கோடியும், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மூலம் ரூ. 8,981 கோடியும், உள்கட்டமைப்பு பங்குகளின் மூலம் ரூ. 8,313 கோடியும், மின் உற்பத்தி பங்குகளின் மூலம்(ரூ. 7,193 கோடியும் மருந்துப் பொருட்கள் பங்குகளின் மூலம் (ரூ. 4,591 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    • முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
    • முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. 

    • "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" ஆகியவை இயங்கி வருகின்றன.
    • இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த விழா முடிவுக்கு வரும். உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

    கொடுமை என்னவென்றால் இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன. பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களின் டீசர்கள் ஏராளமாக வளம் வருகின்றன.

    இந்த வீடியோக்களில் பல, பெண்கள் குளிக்கும் முழு வீடியோக்களையும் பார்க்க, பயனர்களை  டெலிகிராம் லிங்க்-குக்கு இட்டுச் செல்கின்றன.

    "மகா கும்ப கங்கை நீராடல்" போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை பகிர்ந்து பயனர்களை இந்த கும்பல்கள் கவர்ந்து வருகின்றன. இதில் #mahakumbh2025, #gangasnan, மற்றும் #prayagrajkumbh உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துகின்றனர். 

    ஒரு பெண் தனது கீழ் முதுகு, பின்பகுதி வெளியே தெரியும் நிலையில் ஆற்றில் குளிக்கும் வீடியோ ஒன்று அதற்கு உதாரணம். தான் வீடியோ பதிவு செய்யப்படுவதை அறியாமல், அந்த பெண் தொடர்ந்து குளிக்கிறார். இந்த வீடியோ பகிரப்பட்ட சமூக வலைதள கணக்கை போல ஏராளமான கணக்குகளில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

    இவற்றில் தற்போது மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், பழைய வீடியோக்களும் சேர்ந்தே உள்ளன. டெலிகிராமில் "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" மற்றும் "திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு" போன்ற சேனல்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி  12 முதல் பிப்ரவரி 18 வரை டெலிகிராம் அனலிடிக்ஸ் படி, 'திறந்தவெளி குளியல்' என்பதை அதிக பெயர்கள் தேடியுள்ளனர்.

     

    இதில் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பலவற்றில், பெண்கள் உடை மாற்றுவது, துண்டுகளுடன் நிற்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேனல்களில் இணைய ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

    கும்பமேளாவுக்கு வரும் எல்லோருடைய கைகளிலும் மொபைல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், யார் யாருடைய புகைப்படம் எடுக்கிறார்கள், யாரை வீடியோ எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய கும்பல்கள் இயங்கி வருகின்றன.

     

    இதுபோன்ற டெலிகிராம் சேனல்களில், பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தவிர, மருத்துவர்கள், செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் சிசிடிவி காட்சிகள், அவர்களின் அந்தரங்க உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது உள்ளிட்ட வீடியோக்களும் வளம் வருகின்றன.

    மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.   

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம். மகா கும்பமேளாவில் மோட்சம் பெற வந்த பெண் சக்திகயின் படங்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்ட செய்தியால் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.

    பெண்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த ஆன்லைன் விற்பனையிலிருந்து ஜிஎஸ்டி சம்பாதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் பங்குதாரராக மாறவில்லையா?

    உ.பி. மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். 

    ×