என் மலர்
இந்தியா
- வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் எல்.ஐ.சி.க்கு ரூ.18,385 கோடி இழப்பு ஏற்பட்டது.
- அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், எல்.ஐ.சி. முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில், ITC மூலம் ரூ.11,863 கோடியும் லார்சன் & டூப்ரோ மூலம் ரூ.6,713 கோடியும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.5,647 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.18,385 கோடியும், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மூலம் ரூ. 8,981 கோடியும், உள்கட்டமைப்பு பங்குகளின் மூலம் ரூ. 8,313 கோடியும், மின் உற்பத்தி பங்குகளின் மூலம்(ரூ. 7,193 கோடியும் மருந்துப் பொருட்கள் பங்குகளின் மூலம் (ரூ. 4,591 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
- முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
- முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
- "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" ஆகியவை இயங்கி வருகின்றன.
- இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த விழா முடிவுக்கு வரும். உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

கொடுமை என்னவென்றால் இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன. பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களின் டீசர்கள் ஏராளமாக வளம் வருகின்றன.

இந்த வீடியோக்களில் பல, பெண்கள் குளிக்கும் முழு வீடியோக்களையும் பார்க்க, பயனர்களை டெலிகிராம் லிங்க்-குக்கு இட்டுச் செல்கின்றன.
"மகா கும்ப கங்கை நீராடல்" போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை பகிர்ந்து பயனர்களை இந்த கும்பல்கள் கவர்ந்து வருகின்றன. இதில் #mahakumbh2025, #gangasnan, மற்றும் #prayagrajkumbh உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு பெண் தனது கீழ் முதுகு, பின்பகுதி வெளியே தெரியும் நிலையில் ஆற்றில் குளிக்கும் வீடியோ ஒன்று அதற்கு உதாரணம். தான் வீடியோ பதிவு செய்யப்படுவதை அறியாமல், அந்த பெண் தொடர்ந்து குளிக்கிறார். இந்த வீடியோ பகிரப்பட்ட சமூக வலைதள கணக்கை போல ஏராளமான கணக்குகளில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் தற்போது மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், பழைய வீடியோக்களும் சேர்ந்தே உள்ளன. டெலிகிராமில் "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" மற்றும் "திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு" போன்ற சேனல்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை டெலிகிராம் அனலிடிக்ஸ் படி, 'திறந்தவெளி குளியல்' என்பதை அதிக பெயர்கள் தேடியுள்ளனர்.

இதில் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பலவற்றில், பெண்கள் உடை மாற்றுவது, துண்டுகளுடன் நிற்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேனல்களில் இணைய ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கும்பமேளாவுக்கு வரும் எல்லோருடைய கைகளிலும் மொபைல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், யார் யாருடைய புகைப்படம் எடுக்கிறார்கள், யாரை வீடியோ எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய கும்பல்கள் இயங்கி வருகின்றன.

இதுபோன்ற டெலிகிராம் சேனல்களில், பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தவிர, மருத்துவர்கள், செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் சிசிடிவி காட்சிகள், அவர்களின் அந்தரங்க உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது உள்ளிட்ட வீடியோக்களும் வளம் வருகின்றன.
மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம். மகா கும்பமேளாவில் மோட்சம் பெற வந்த பெண் சக்திகயின் படங்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்ட செய்தியால் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.
பெண்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த ஆன்லைன் விற்பனையிலிருந்து ஜிஎஸ்டி சம்பாதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் பங்குதாரராக மாறவில்லையா?
உ.பி. மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
- பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
- அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றபின், வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார். அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக மெக்சிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக இந்த வரிவதிப்பை அமல்படுத்தினார்.
இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா சென்ற அவர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு சற்று முன்னதாக பரஸ்பர விரி விதிப்பு முறையை அறிவித்தார்.
பரஸ்பர வரி என்பது அமெரிக்க உற்பத்தி பொருட்களை ஒரு நாடு இறக்குமதி செய்தால் அதற்கு வரி விதிக்கப்படும். அதேபோல் அந்த நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி வதிக்கப்படும்.
அந்த வகையில் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வதிக்கிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் தன்னுடன் யாரும் விவாதம் செய்ய முடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இதை உறுதியாக தெரிவித்தாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நாடு கடத்தப்படும் இந்தியர்கள் விலங்கிட்டு அனுப்பி வைப்பது தொடர்பாக மோடி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோடி தனது எதிர்ப்பு தெரிவிப்பதில் தோல்வியடைந்து விட்டார் என கார்கே குற்ற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கார்கே கூறியதாவது:-
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போதிலும், அமெரிக்க இந்தியாவுக்கு நாடு கடத்தியவர்களை கையில் விலங்கிட்டுதான் அனுப்பி வைத்துள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த இழிவுப்படுத்தும் விவகாரத்தில் முறையான எதிர்ப்பை அமெரிக்காவுக்கு தெரிவிப்பதில் நமது அரசு தோல்வியடைந்துவிட்டது.
பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நமது மீது பரஸ்பர விதியை சுமத்தியுள்ளது. ஆனால், இதற்கு பிரதமர் மோடி எதிர்ப்புக்கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள். அதை நம் அரசாங்கம் அமைதியாக ஏற்றுக்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா மற்றும் இந்தியா மக்களை இழிவுப்படுத்துவது தெளிவாகிறது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நகார்கோவிலில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.
மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் புராண கால நதியான சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. சனாதன தர்மம், கங்கை நதி, இந்தியாவுக்கு எதிரானவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்று தெரிவித்தார்.
- அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
- அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்குள் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கொல்கத்தா, டாங்ராவில் உள்ள நான்கு மாடி வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் இரண்டு பெண்கள், ஒரு சிறுமியின் உடல் கை மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
அதே நேரத்தில் சகோதரர்களான, உயிரிழந்த 2 பெண்களின் கணவர்களும், மகனும் பயணித்த கார் இன்று காலை 3 மணியளவில் EM பைபாஸ் சாலையில் உள்ள அபிஷிக்தா கிராசிங் அருகே மெட்ரோ தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சகோதரர்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் வீட்டில் சடலமாக கிடந்தவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
தகவலின்படி வீட்டில் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, ரோமி டே (38), சுதேஷ்னா டே (39) ஆகிய பெண்களின் உடல்கள். அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கார் விபத்தில் சிக்கிய சகோதரர்கள், பிரனய் டே (45 வயது), பிரசுன் டே (43 வயது), மகன் பிரியம் டே (14) ஆகியோர் ஆவர். அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எனவே 6 பேரும் திட்டமிட்டு தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இரண்டு சகோதரர்களும் தங்கள் மனைவிகளையும் மகளையும் கொன்றுவிட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
- இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
- தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 3 கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று குஜராத் சட்டப்பேரவைக்கு முன்பாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைகளில் விலங்கிட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவிலிருந்து விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து மோடி அரசு மவுனம் காப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Gujarat Congress MLAs chain themselves up and demonstrate outside the State Assembly in Gandhinagar, as a mark of protest against the deportation of illegal Indian immigrants from the US while being handcuffed and shackled. pic.twitter.com/zumqGnicOL
— ANI (@ANI) February 19, 2025
- தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
- அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.
ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.
மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
- சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
- அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.
கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
- தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்குப் பணி நேரத்தைக் குறைத்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
எனவே மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய, மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது அதைப் பின்பற்றி ஆந்திரப் பிரதேச அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.