என் மலர்
இந்தியா
- அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
- அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்குள் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கொல்கத்தா, டாங்ராவில் உள்ள நான்கு மாடி வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் இரண்டு பெண்கள், ஒரு சிறுமியின் உடல் கை மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
அதே நேரத்தில் சகோதரர்களான, உயிரிழந்த 2 பெண்களின் கணவர்களும், மகனும் பயணித்த கார் இன்று காலை 3 மணியளவில் EM பைபாஸ் சாலையில் உள்ள அபிஷிக்தா கிராசிங் அருகே மெட்ரோ தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சகோதரர்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் வீட்டில் சடலமாக கிடந்தவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
தகவலின்படி வீட்டில் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, ரோமி டே (38), சுதேஷ்னா டே (39) ஆகிய பெண்களின் உடல்கள். அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கார் விபத்தில் சிக்கிய சகோதரர்கள், பிரனய் டே (45 வயது), பிரசுன் டே (43 வயது), மகன் பிரியம் டே (14) ஆகியோர் ஆவர். அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எனவே 6 பேரும் திட்டமிட்டு தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இரண்டு சகோதரர்களும் தங்கள் மனைவிகளையும் மகளையும் கொன்றுவிட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
- இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
- தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 3 கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று குஜராத் சட்டப்பேரவைக்கு முன்பாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைகளில் விலங்கிட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவிலிருந்து விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து மோடி அரசு மவுனம் காப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Gujarat Congress MLAs chain themselves up and demonstrate outside the State Assembly in Gandhinagar, as a mark of protest against the deportation of illegal Indian immigrants from the US while being handcuffed and shackled. pic.twitter.com/zumqGnicOL
— ANI (@ANI) February 19, 2025
- தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
- அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.
ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.
மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
- சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
- அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.
கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
- தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்குப் பணி நேரத்தைக் குறைத்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
எனவே மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய, மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது அதைப் பின்பற்றி ஆந்திரப் பிரதேச அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- குடிபோதையில் டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
- அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் அரசு போக்குவரத்து கழக டெப்போ இருக்கிறது. இந்த டெப்போவில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
அதேபோல் சம்பவத்தன்று இரவும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 10 மணியளவில் ஒரு வாலிபர் டெப்போவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு சாவியுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறினார். பின்பு அதனை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முயன்றார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெப்போ ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். குடிபோதையில் இருந்த வாலிபர், அதற்கு மறுப்பு தெரிவித்து டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
தனது ஊருக்கு இரவு 8 மணிக்கு செல்லக் கூடிய பஸ்சை தவறவிட்டு விட்டதாகவும், ஆகவே இந்த பஸ்சை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச்செல்வதில் குறியாக இருந்தார். இதனால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ்சை எடுத்துச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மல்லப் பள்ளி பகுதியை சேர்ந்த ஜெபின்(வயது34) என்பது தெரியவந்தது. குடிபோதை யில் டெப்போவுக்குள் புகுந்து அரசு பஸ்சை எடுத்துச்செல்ல முயன்று ரகளையில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வாலிபர் ஜெபின் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போது, அவர்களது நண்பர்கள் சிலரும் அவருடன் இருந்துள்ளனர். போலீசார் வந்ததும் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
வெள்ள நிவாரண நிதியாக 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
தேசிய நிவாரண நிதியிலிருந்து தொகை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அரசு ஒரு அரணாக உள்ளதாக பதிவிட்டு பேரிடர் நிதி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
The Modi government stands like a rock in support of the disaster-affected people.Today, the MHA approved an additional central assistance of Rs. 1554.99 crore to Andhra Pradesh, Nagaland, Odisha, Telangana, and Tripura under the NDR fund. This is in addition to the Rs.…
— Amit Shah (@AmitShah) February 19, 2025
- மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி.
- சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.
இவரது ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு இவர் சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.
மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரது வீரம் மற்றும் தொலைநோக்கு தலைமை சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்தது, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.
வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
I pay homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti.His valour and visionary leadership laid the foundation for Swarajya, inspiring generations to uphold the values of courage and justice. He inspires us in building a strong, self-reliant and prosperous India. pic.twitter.com/Cw11xeoKF1
— Narendra Modi (@narendramodi) February 19, 2025
- 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள்.
- புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
மும்பையில் மத்திய மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை இணைமந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவமனைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை நாங்கள் அமைத்து வருகிறோம்.
பெண்களை கடுமையாக பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி முழுமையடையக்கூடும். மருந்து சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் தடுப்பூசி மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தை வடிவில் உள்ள ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.
- அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் ஞானேஷ் குமார் பணியாற்றினார்.
கடந்த திங்கள்கிழமை இரவோடு இரவாக அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ஞானேஷ் குமார். எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று(பிப்ரவரி 19) காலை 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்றுள்ளார்.
யார் இந்த ஞானேஷ் குமார்:
ஜனவரி 27, 1964 அன்று உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் பிறந்த ஞானேஷ் குமார் மிகவும் படித்த வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை டாக்டர் சுபோத் குப்தா மாவட்ட சுகாதர அதிகாரி CMO பதவி வகித்தவர்.
ஞானேஷ் குமார் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1988 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கேரளப் கேட்ரே ஐஏஎஸ் அதிகாரியானார். திருவனந்தபுரத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரியாக முதல் பணி நியமனம் கிடைத்தது. UPA அரசின்போது 2007 முதல் 2012 வரை பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார்.

2014 ஆம் ஆண்டு,டெல்லியில் கேரள அரசின் குடியுரிமை(citizenship)ஆணையராகப் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் பணியாற்றிய ஞானேஷ் குமார் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்:
2019 இல் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35A இன் விதிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருடன் சேர்ந்து, லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

அப்போது ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் -2019 ஐ உருவாக்குவதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார்.
அயோத்தி ராமர் கோவில்:
2019 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஞானேஷ் குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின் ராமர் கோவில் உருவாக்கத்தில் ஞானேஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் பிரதிநிதியாக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். குழந்தை வடிவில் உள்ள ஸ்ரீ ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். அவரது தலைமையில் எதிர்வரும் பீகார், அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
- பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
- நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு தொற்று நோய் பரவியபடி இருக்கிறது. பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதற்கு சாதகமான பருவம் தொடங்கியிருப்பதாவும், ஆகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
* பறவைகள்-விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
* திறந்த கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட கள் அல்லது அது போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
* கீழே விழுந்த பழங்கள், பாக்கு அல்லது அதுபோன்ற பொருட்களை கையாளும் போது எப்போதும் கையுறைகளை அணியுங்கள்.
* வவ்வால்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பழங்கள் அல்லது பழங்களின் மேற்பரப்புகளை தொடும்போது கையுறைகளை பயன்படுத்தவும். நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
* வவ்வால்களின் வாழ்விடங்களை தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வேண்டாம், ஏனென்றால் இது அவற்றை கிளர்ச்சியடைய செய்து உடல் திரவங்களின் சுரப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார்.
- குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்களை நடத்துவார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்றோடு (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெற்றார். இதையடத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று காலை (பிப்ரவரி 19) பதவியேற்று கொண்டார்.
இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார். இவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
மேலும், 2027-ம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் நடத்துவார். 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.
#WATCH | Delhi: Newly-appointed Chief Election Commissioner Gyanesh Kumar takes charge of the office. pic.twitter.com/0GJ6HiBI1v
— ANI (@ANI) February 19, 2025