search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளிவைப்பு: நிர்மலா சீதாராமன்
    X

    கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளிவைப்பு: நிர்மலா சீதாராமன்

    • வாராக்கடனை தள்ளிவைப்பது, கடன் வாங்கியவர்களுக்கு எந்தவகையிலும் பலன் அளிக்காது.
    • சட்ட பிரச்சினை நீண்ட காலமாக இழுக்கும்.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகள் வாரியம் வகுத்த கொள்கைப்படி, வாராக்கடன்களை 4 ஆண்டுகள் முடிந்தவுடன், வங்கிகள் தங்களது கணக்கு இருப்பு அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு 'கடன் தள்ளிவைப்பு' என்று பெயர்.

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி, கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக்கடனை வணிக வங்கிகள் தள்ளிவைத்துள்ளன.

    இப்படி தள்ளிவைக்கப்பட்ட கடன்களை பெற்றவர்கள், அவற்றை திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து கடனை திரும்ப வசூலிப்பதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக வங்கிகள், நடைமுறையில் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றன.

    சிவில் கோர்ட்டுகளில் வழக்கு தொடருதல், கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருதல், திவால் சட்டத்தின்கீழ் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருதல், பேச்சுவார்த்தை நடத்துதல், சமரச நடவடிக்கை, வாராக்கடன் சொத்துகளை விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வாராக்கடனை தள்ளிவைப்பது, கடன் வாங்கியவர்களுக்கு எந்தவகையிலும் பலன் அளிக்காது.

    கடந்த 5 நிதி ஆண்டுகளில், தள்ளிவைக்கப்பட்ட வாராக்கடன்களில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 45 கோடி உள்பட மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 111 கோடி கடன்களை பொதுத்துறை வங்கிகள் மீட்டுள்ளன.

    கடனை திருப்பிச்செலுத்த தவறியவர்களிடம் இருந்து சிறு முதலீட்டாளர்களின் பணத்தை மீட்பது சிக்கலான பிரச்சினைதான். ஏனென்றால், சட்ட பிரச்சினை நீண்ட காலமாக இழுக்கும். பணத்துக்கு உரிமை கோருவதில், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்பட பலர் இருப்பார்கள்.

    இந்த சிரமங்களை நானும் அறிவேன். இதை பரிசீலித்து, எப்படி எளிமைப்படுத்தலாம் என்று ஆராய்வது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் பேசுகையில், கடனை திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட இயலாது. ஆனால் அவர்களின் சொத்துகளை ஏலத்தில் விடும்போது, அவர்களது பெயர்களை தெரிவிக்க வேண்டி இருக்கும்'' என்று கூறினார்.

    Next Story
    ×