search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜாபர் சாதிக்குடன் செல்போனில் பேசியவர்களுக்கு சிக்கல்: அதிரடியில் அமலாக்கத்துறை
    X

    ஜாபர் சாதிக்குடன் செல்போனில் பேசியவர்களுக்கு சிக்கல்: அதிரடியில் அமலாக்கத்துறை

    • போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள்.
    • ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

    இந்த வழக்கில், சூடோபெட்ரின் வேதிப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இதில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள். வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட இயக்குனர் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, வழக்கை வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதன்பிறகுதான் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை கோர்ட்டில் அனுமதி பெற்று பதிவு செய்துள்ளனர். அவை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. செல்போனில் பதிவானது அவரது குரல்தான் என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்கிறார்கள்.

    ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அவருடன் பேசிய நபர்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்ததும் சம்பந்தப்பட்ட அந்த நபர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இதன்படி இயக்குனர் அமீரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் குரல் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்று, அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பூனைபோல காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×