என் மலர்
இந்தியா

பஞ்சாப் முதல் மந்திரி ஆகிறாரா கெஜ்ரிவால்?: பகவந்த் மான் விளக்கம்

- கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக விரும்புவதாக எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர்.
- டெல்லியில் எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும் என்றார்.
சண்டிகர்:
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கெஜ்ரிவால் விரைவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரியான பகவந்த் மான் சர்துல்கர் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர்கள் தாங்கள் யூகிப்பதை எல்லாம் வதந்தியாகப் பரப்பி வருகின்றனர்.
எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இது எங்கள் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம். ஆனால், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினார் என எதிர்க்கட்சியினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். அதில் துளியும் உண்மை இல்லை.
டெல்லியில் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும்.
எங்கள் ஒருங்கிணைப்பாளர் கட்சியை கட்டமைக்கும் பணியில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவார் என தெரிவித்தார்.